search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தல் தங்கம்
    X
    கடத்தல் தங்கம்

    சென்னை விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் தங்கம் பறிமுதல்

    சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    அப்போது அந்த விமானத்தில் சந்தேகப்படும்படியாக வந்த வேலூரை சேர்ந்த விவேக் மனோகரன் (வயது 30) என்பவரை நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை.

    ஆனால் அவர் அணிந்து இருந்த கால் செருப்பு சற்று வித்தியாசமாக இருந்ததால் அவற்றை பிரித்து பார்த்தனர். அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் பயணிகள் அனைவரும் சென்ற பிறகு அந்த விமானத்துக்குள் ஏறி சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு இருக்கையின் அடியில் பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இதை பிரித்து பார்த்தபோது அதற்குள் 6 தங்க கட்டிகள் இருந்தன.

    ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்த பயணி, விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து இருக்கைக்கு அடியில் விட்டு சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பிடிபட்ட விவேக் மனோகரனிடம் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×