search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் புதிய மீன்மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்காக குவிந்த பொதுமக்களை காணலாம்
    X
    வேலூர் புதிய மீன்மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்காக குவிந்த பொதுமக்களை காணலாம்

    புரட்டாசி மாதம் முடிந்ததால் மீன் கடைகளில் குவிந்த அசைவ பிரியர்கள்

    புரட்டாசி மாதம் முடிந்ததால் வேலூர் மீன் மார்க்கெட்டில் நேற்று மீன் வாங்க அசைவ பிரியர்கள் குவித்தனர். மீன் விலையும் அதிகரித்திருந்தது.
    வேலூர்:

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து, சைவம் மட்டும் சாப்பிடுவார்கள். இதனால் கடந்த மாதம் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. காய்கறிகளின் விற்பனை அதிகமாக இருந்தது. இதனால் புரட்டாசி மாதம் முழுவதும் மீன் விலை குறைந்திருந்தது.

    இந்த நிலையில் புரட்டாசி மாதம் முடிந்ததை தொடர்ந்து அசைவ பிரியர்கள் இறைச்சி மற்றும் மீன் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டத்தொடங்கி விட்டனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று வேலூர் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதியது.

    கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேலூர் மார்க்கெட்டுக்கு மீன் வரவழைக்கப்படுகிறது. லாரிகளில் கொண்டுவரப்பட்ட மீன்கள் நேற்று காலையிலே விற்று தீர்ந்துவிட்டன. விற்பனை அதிகரித்ததுடன் மீன்களின் விலையும் நேற்று அதிகரித்து காணப்பட்டது.

    ரூ.150-க்கு விற்ற மத்தி மீன் நேற்று ரூ.200-க்கும், ரூ.300-க்கு விற்பனையான வஞ்சிரம் ரூ.500 முதல் 600 வரைக்கும், ரூ.120-க்கு விற்ற கட்லா ரூ.200-க்கும் விற்பனையானது.

    மீன்வாங்க பொதுமக்கள் அதிக அளவில் மார்க்கெட்டுக்கு வந்திருந்தனர். அவர்களில் பலர் கொரோனா அச்சமின்றி முககவசம் அணியாமல் வந்திருந்தனர்.
    Next Story
    ×