search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 65 பேர் தேர்ச்சி

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘நீட்‘ தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 65 பேர் தேர்ச்சி பெற்றனர்.
    புதுக்கோட்டை:

    மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 13-ந் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. அன்றைய தினம் தேர்வெழுத முடியாதவர்களுக்கு கடந்த 14-ந் தேதி தேர்வு நடைபெற்றது. இந்தநிலையில் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் ‘நீட்‘ தேர்வை எழுதினர்.

    இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 410 பேர், ‘நீட்‘ தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 351 பேர் மட்டும் தேர்வெழுதினர். இந்தநிலையில் தேர்வு முடிவுகள் வெளியானதில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 65 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர். தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ்-2 முடித்து தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் சேகரிக்க முடியவில்லை என்றனர்.

    மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களில் இத்தேர்வில் 720-க்கு 300 மதிப்பெண்களை அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் மகதீர்கான் பெற்றார். 201-300 மதிப்பெண்களுக்குள் 7 பேரும், 150 முதல் 200 மதிப்பெண்களுக்குள் 13 பேரும், 113 முதல் 149 மதிப்பெண்களுக்குள் 45 பேரும் பெற்றுள்ளனர். 112 மதிப்பெண்களுக்கு குறைவாக 286 பேர் எடுத்துள்ளனர்.

    300 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் மகதீர்கான் கூறுகையில், அரசு தரப்பில் நடத்தப்பட்ட ‘நீட்‘ தேர்வு பயிற்சி மற்றும் இலவச பயிற்சி மையத்திலும் படித்து தேர்வெழுதி இருந்தேன். நான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் நீட் தேர்வில் கிடைத்துள்ளது. மருத்துவப்படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
    Next Story
    ×