search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    பெண்ணாடம் அருகே பெண்ணிடம் போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.15 ஆயிரம் மோசடி

    பெண்ணாடம் அருகே பெண்ணிடம் போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.15 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    பெண்ணாடம்:

    அரியலூர் மாவட்டம், செந்துறை மணக்குடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மனைவி வள்ளி (வயது 40). முத்து வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். வள்ளி அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று பெண்ணாடம் வந்த வள்ளி தன்னுடைய கணவர் அனுப்பிய பணத்தை எடுப்பதற்காக பஸ் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். அப்போது அருகில் இருந்த 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரிடம் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.20 ஆயிரம் எடுத்துத் தரச்சொன்னார். அந்த நபர் ரூ.5 ஆயிரம் மட்டும் எடுத்து கொடுத்து விட்டு, வள்ளியிடம் ஏ.டி.எம். மையத்தில் உங்களது பின் நம்பர் பதிவாகவில்லை என்பதால் மீதி பணம் வரவில்லை என்று கூறி, ஏ.டி.எம். கார்டை திருப்பி கொடுத்தார். இதை பெற்றுக்கொண்ட அவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

    ஆனால் வங்கி கணக்கிற்கு அவரது மகன் விவேக் செல்போன் எண் வழங்கி இருந்ததால், அவரது செல்போனுக்கு ரூ.20 ஆயிரம் எடுத்ததாக குறுஞ்செய்தி சென்றது. இதை அறிந்த விவேக் சென்னையில் இருந்து தனது தாய் வள்ளியிடம் கேட்டுள்ளார். அப்போது, தான் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுத்துள்ளதாகவும், இதை வாலிபர் ஒருவர் எடுத்து கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து வள்ளி தான் கையில் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை பார்த்தார். ஆனால் அது போலியானது என்று தெரிந்தது. தனக்கு ரூ.5 ஆயிரத்தை எடுத்துக்கொடுத்து விட்டு, தான் சென்றவுடன் தன்னுடைய கார்டில் இருந்து மேலும் ரூ.15 ஆயிரத்தை எடுத்து மோசடி செய்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வள்ளி இது பற்றி பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×