என் மலர்
செய்திகள்

விபத்து
கோவில்பட்டி அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி
கோவில்பட்டி அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவில்பட்டி:
கிருஷ்ணகிரி மாவட்டம் மாதைப்பள்ளியை சேர்ந்தவர் ஜான் சார்லஸ் சகாயராஜ். இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஜெர்விஷ் டோனி (வயது 21). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் தன்னுடன் படிக்கும் சென்னை ராயபுரத்தை சேர்ந்த டெல்லி பாபு மகன் யுவராஜ் (20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு இருவரும் மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர். ஜெர்விஷ் டோனி மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
நேற்று அதிகாலை ஒரு மணிக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரை கடந்து நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென நாய் ஒன்று ரோட்டின் குறுக்கே வந்துள்ளது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்காக ஜெர்விஷ் டோனி பிரேக் பிடித்துள்ளார். இதில், நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் ஜெர்விஷ் டோனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். யுவராஜ் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்ததும் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன், நாலாட்டின்புதூர் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். படுகாயமடைந்த யுவராஜை மீட்டு, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story