என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  கொரோனா விதியை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க 2 குழுக்கள் அமைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகர்கோவிலில் கொரோனா விதியை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாளில் 25 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
  நாகர்கோவில்:

  கொரோனா பரவலின் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அளித்திருந்தாலும், கொரோனா விதிமுறைகளை மக்கள் அனைவரும் கடைபிடிக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. அந்த சட்டத்தின்படி கொரோனா தனிமைப்படுத்துதல் தொடர்பான உத்தரவுகளை மீறுவோருக்கு ரூ.500-ம், வாயையும் மூக்கையும் சேர்த்து மூடி முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200-ம், பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும்.

  சலூன், உடற்பயிற்சிக் கூடம், வணிக வளாகங்கள், பொது இடங்களில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாத தனிநபர்களுக்கு ரூ.500 மற்றும் பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

  இந்த சட்டத்தின்படி அபராத நடவடிக்கைகள் நாகர்கோவில் நகரில் நேற்று முதல் தொடங்கியது. இதற்காக மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பகவதிப்பெருமாள், மாதவன்பிள்ளை, ஜான் ஆகியோரும், தியாகராஜன், ராஜேஷ், ராஜா ஆகியோரும் அடங்கிய இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  இந்த குழுவினர் நேற்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மொத்தம் 3 மணி நேரம் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், வடசேரி, கோட்டார் சந்தைகள், கடைவீதிகள், மளிகை கடைகள் போன்றவற்றில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கும், மூக்கையும் வாயையும் மூடாமல் நாடிக்கு முகக்கவசம் அணிந்தவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத கடைக்காரர்களுக்கும் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

  நேற்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 25 பேருக்கு ரூ.5 ஆயிரமும், சமூக இடைவெளியை பின்பற்றாத 2 கடைக்காரர்களுக்கு தலா ரூ.500 என மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

  இந்த நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே பொதுமக்களும், வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் அரசின் கொரோனா கால விதிமுறைகளை தவறாமல் கடைபிடித்து ஒத்துழைப்பு அளிக்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
  Next Story
  ×