search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை- விழுப்புரத்துக்கு நாளை எடப்பாடி பழனிசாமி வருகை

    கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை விழுப்புரம் வருகிறார்.
    விழுப்புரம்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்டம் தோறும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அதன்படி அவர் நாளை (9-ந்தேதி) மாலை விழுப்புரம் வருகிறார்.

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் அவர், தெர்மல் ஸ்கேனர் மூலம், தன் உடல் வெப்பத்தை பரிசோதனை செய்துகொண்டு, சானிடைசரால் கைகளை சுத்தம் செய்கிறார். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து புதிய திட்டப்பணிகளையும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

    அதனை தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்படும் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

    அதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக கூட்ட அறையில் நடைபெறும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.

    இந்த கூட்டம் முடிந்த பின்னர் சிறு, குறு தொழில் முனைவோர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளின் பட்டியல்களை தயார் செய்யும் பணியில் அனைத்துத்துறை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் கொரோனா நோய் தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் சம்பந்தமான விவரங்களை சுகாதாரத்துறையினர் தயார்படுத்தி வருகின்றனர்.

    மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பகுதி மற்றும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முழுவதும் பொதுப்பணித்துறை சார்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கம் மற்றும் அரசு அலுவலக அறைகளை சீரமைத்து வர்ணம் பூசும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முழுவதையும் இப்போதே காவல்துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    மேலும் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. நாகராஜன் மேற்பார்வையில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. எழிலரசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் விழுப்புரம் ராதாகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி ஜியாவுல்ஹக் மற்றும் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 15 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    Next Story
    ×