என் மலர்
செய்திகள்

கோவையில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் மாரடைப்பில் மரணம்
கோவை:
கோவை சுந்தராபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் மணி (வயது 74). தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரோஜினி ( 72). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் திருமணமாகி இவர்களுடனே வசித்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு சரோஜினிக்கு வாதம் ஏற்பட்டு கை, கால்கள் முடக்கம் ஏற்பட்டது.
இதனால் அவர் படுத்த படுக்கையாக இருந்து வந்தார். படுத்த படுக்கையாக இருந்த தனது மனைவியை மணி அன்பாக அருகில் இருந்து கவனித்து வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு திடீரென உடல் நிலை மோசமடைந்து சரோஜினி இறந்தார்.
இதனை கேட்ட அதிர்ச்சியில் மணி மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மணியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் இறந்தது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் மனைவி இறந்த சில மணி நேரத்தில் கணவர் இறந்ததால் 2 பேரையும் ஒரே தகனமேடையில் வைத்து தகனம் செய்யும் பணியை குடும்பத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள்.