என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை அருகே மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளி மகளை கொன்று தந்தை தற்கொலை
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பணங்குளம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் செல்லையா (வயது 70). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
செல்லையாவின் மகள் சாந்தி (43). மாற்றுத்திறனாளியாக இவர் சற்று மன நிலையும் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவருக்கு திருமணம் செய்து கொடுக்காமல் செல்லையா தன்னுடனேயே வைத்து பராமரித்து வந்தார்.
தந்தையும், மகளும் தனியாக வசித்து வந்த நிலையில் தங்களை பார்த்துக்கொள்ள உறவினர்கள் யாரும் முன் வரவில்லை என்ற விரக்தியிலும், வேதனையிலும் செல்லையா இருந்து வந்தார். மேலும் தனக்கும் வயதாகி விட்டதால் தான் இறந்த பின்னர் மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளி மகளை யார் பார்த்துக்கொள்வார் என்ற வேதனை அவரை மிகவும் கவலை அடையச் செய்தது.
இதனால் தனது மகளை கொன்று, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக நேற்று இரவு சோற்றியில் குருணை மருந்தை கலந்ததோடு, ஆம் லெட்டிலும் விஷத்தை கலந்துகொடுத்தார். இதனை அறியாமல் சாப்பிட்ட செல்லையாவின் மகள் சாந்தி ஒரு சில விநாடிகளில் வயிற்று வலியால் துடித்தார்.
மகளின் வேதனையை பார்க்க முடியாமல் தவித்த செல்லையா தானும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டார். இதற்கிடையே சாந்தியின் அலறல் சத்தம் கேட்டு திரண்டு வந்த அக்கம் பக்கத்தினர் தந்தையும், மகளும் விஷம் குடித்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இருவரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர். பின்னர் அவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பாக கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






