search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதல் ஜோடி
    X
    காதல் ஜோடி

    கடலூரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

    கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தது. மேலும் போலீசாருடன், பா.ம.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு வான்ராஜன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரும், பண்ருட்டி அருகே சிலம்பிநாதன்பேட்டையை சேர்ந்த 30 வயது வாலிபரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். இதுபற்றி அறிந்த பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த இளம்பெண்ணுக்கு, மாப்பிள்ளை பார்த்து வந்ததாகவும் தெரிகிறது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பேராசிரியையும், அந்த வாலிபரும் வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் பெண்ணின் பெற்றோர், அந்த வாலிபரை தொடர்பு கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் காதல் ஜோடி நேற்று முன்தினம் கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்து பாதுகாப்பு கேட்டு மனு ஒன்றை அளித்தனர். அதன் பேரில் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்திக்கு உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, நேற்று மாலை காதல் ஜோடியின் பெற்றோர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பெண்ணின் பெற்றோர், காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பெண்ணிடம் தங்களுடன் வந்து விடுமாறு கூறி அழுது கெஞ்சினர். ஆனால் அந்த பெண், தான் காதல் கணவருடன் செல்வதாக உறுதியாக கூறினார். இதையடுத்து போலீசார், காதல் ஜோடிக்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது என்று இருவீட்டாரிடமும் தெரிவித்தனர்.

    அப்போது அங்கு வந்த பா.ம.க.வினர், பெண்ணின் பெற்றோர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த காவல் நிலையம், பண்ருட்டி உட்கோட்டத்திற்குள் வருகிறது. அதனால் இந்த புகாரை பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தான், விசாரிக்க வேண்டும் என்று கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் பா.ம.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். பின்னர் அந்த பெண், தனது காதல் கணவருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
    Next Story
    ×