என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
கடலூர் மாவட்டத்தில் 8 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு - மேலும் 5 பேர் பலி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்கள். டாக்டர் உள்பட 242 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 7 ஆயிரத்து 841 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 242 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் என்.எல்.சி. மருத்துவமனை டாக்டர், கடலூர் அரசு மருத்துவமனை செவிலியர், 2 மருத்துவமனை பணியாளர்கள், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 2 கர்ப்பிணிகள், கடலூரை சேர்ந்த பிரசவித்த தாய், கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 83 பேர், அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள 3 நோயாளிகளுக்கும் பாதிப்பு உறுதியானது. இவர்களை தவிர கடலூர், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 3 போலீசார், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 138 பேர், சென்னையில் இருந்து கடலூர், மங்களூர் வந்த 3 பேர், பெங்களூருவில் இருந்து நெய்வேலி என்.எல்.சி., நல்லூரை சேர்ந்த 4 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் வரை 91 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று 5 பேர் உயிரிழந்தனர். அதன் விவரம் வருமாறு:-
வடலூர் நொச்சிக்காட்டை சேர்ந்த 65 வயது முதியவர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், ஆபத்தாணபுரத்தை சேர்ந்த 65 வயது முதியவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் நோய் தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேபோல் பெண்ணாடம் சுமைதாங்கி பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி, பண்ருட்டி திருவதிகையை சேர்ந்த 69 வயது முதியவர், விருத்தாசலத்தை சேர்ந்த 47 வயது பெண் ஆகியோர் இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் நோய் தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 3 பேரும் பலியானார்கள்.
இருப்பினும் இந்த 3 பேரின் சாவு விவரம் மாவட்ட எண்ணிக்கையில் கொண்டு வரப்படவில்லை.
நேற்று ஒரே நாளில் 383 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இது வரை 5 ஆயிரத்து 233 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். கொரோனா பாதித்த 2 ஆயிரத்து 497 பேர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், 262 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இது வரை 70 ஆயிரத்து 54 பேருக்கு பரிசோதனை செய்ததில் 8083 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 570 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
Next Story






