search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எமரால்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்ட மூதாட்டிக்கு மருத்துவ பரிசோதனை
    X
    எமரால்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்ட மூதாட்டிக்கு மருத்துவ பரிசோதனை

    தொடர் கனமழையால் நிவாரண முகாம்களில் 900 பேர் தங்க வைப்பு

    ஊட்டியில் தொடர் கனமழையால் நிவாரண முகாம்களில் 900 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
    ஊட்டி:

    இந்திய வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்தில்கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளது. குறிப்பாக நாளை(சனிக்கிழமை) கனமழை பெய்யும் என்று தெரிவித்து இருக்கிறது. கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு வெள்ளம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டது. நடப்பாண்டில் மரங்கள் விழுந்து மின் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு மற்றும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மழைநீர் செல்லக்கூடிய மிகவும் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அப்பகுதிகளில் 25 முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. முக்கியமாக உயிர்ச்சேதம் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    எமரால்டு மின்வாரிய குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால், இந்திரா நகர், சத்யா நகர், வினோபாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 100 பேர் எமரால்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு அறைக்கும் குறிப்பிட்ட நபர்கள் சமூக இடைவெளி விட்டு தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு தேவையான உணவு உள்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால், தடுப்பு நடவடிக்கையாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு முககவசங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும் மழையால் உடல்நிலை பாதிக்கப்படாமல் இருக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் மருத்துவ குழுவினர் தினமும் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்படுகிறது. ஏதேனும் அறிகுறிகள் இருக்கிறதா, சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்களா என்று கண்காணித்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை நிவாரண முகாம்களில் 900 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
    Next Story
    ×