search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவர்களை படத்தில் காணலாம்.
    X
    விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவர்களை படத்தில் காணலாம்.

    விவசாய பணிகளில் ஆர்வம் காட்டும் கல்லூரி மாணவர்கள்

    தொடர் விடுமுறையால் கறம்பக்குடி பகுதி கல்லூரி மாணவர்கள் விவசாய பணிகளில் ஆர்வம் காட்டுகின்றனர்.
    கறம்பக்குடி:

    கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அவை மீண்டும் எப்போது செயல்படும் என்பது தெரியாத நிலை உள்ளது. கல்லூரிகளில் இந்த ஆண்டிற்கான பருவதேர்வுகள் நடைபெறாத நிலையில், பல்கலைக்கழகங்கள் என்ன முடிவு எடுக்கப்போகின்றன என்று மாணவர்கள் குழப்பத்துடன் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் தொடர் விடுமுறையால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வீட்டில் இருக்கும் கல்லூரி மாணவர்கள், விவசாய பணிகளில் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர். சமீப காலமாக விவசாயம் குறித்தும், தமிழர்களின் பாரம்பரியம், கலாசார பெருமைகள் குறித்தும் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. இது இளைய தலைமுறையினரிடம் விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

    இதன் காரணமாக கறம்பக்குடி பகுதியில் விவசாய பணிகளில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். உழவு, நாற்று பறிப்பது, பூச்சி மருந்து தெளிப்பது, வரப்புகளை சீரமைப்பது என பல்வேறு பணிகளை மாணவர்கள் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர்.

    இதற்காக சமூக வலைத்தளங்களில் குழு உருவாக்கி, அவர்கள் அன்றாடம் செய்த விவசாய பணிகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவுகள் விவசாய குடும்பத்தை சாராத மாணவர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து கறம்பக்குடியில் வயலில் பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் ஒருவர் கூறுகையில், ‘நான் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. இயற்பியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். கொரோனா ஊரடங்கால் இறுதி பருவ தேர்வு நடைபெறாமலேயே கல்லூரி மூடப்பட்டுவிட்டது. விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்றபோதும் முன்பெல்லாம் விவசாய வேலைகளில் ஈடுபட பெற்றோர்கள் அனுமதித்தது இல்லை. எங்கள் கஷ்டம் எங்களோடு போகட்டும், நீ நன்கு படித்து வேலைக்கு செல் என்று வலியுறுத்தி வந்தனர். ஆனால் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தில் நமது பங்களிப்பு இருக்க வேண்டும் என்றே நான் நினைத்தேன். இதனால் கடந்த 3 மாதமாக தினமும் விவசாய வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன். எனது ஆர்வத்திற்கு பெற்றோரும் உதவி செய்து வருகின்றனர். கறம்பக்குடி பகுதியில் ஏராளமான கல்லூரி மாணவர்கள், விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர், என்று கூறினார்.

    ஊரடங்கு காலத்தில் பொழுதை வீணாக்காமல் நாட்டின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இது குறித்து கல்லூரி மாணவரின் தந்தை கூறுகையில், எங்கள் தலைமுறையோடு விவசாயம் நின்றுவிடும் என்று நினைத்தோம். ஆனால் எங்கள் பிள்ளைகள் காட்டும் ஆர்வம் எந்த நிலையிலும் விவசாயத்தை கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையை தந்துள்ளது, என்றனர்.
    Next Story
    ×