search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம்
    X
    வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம்

    கீழ்ஆலத்தூர் ஏரியில் தூர்வாரும் பணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    கீழ்ஆலத்தூர் ஏரியில் ரூ.35¾ லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியை வேலூர் மாவட்ட கலெக்டர் அ.சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.
    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியம் கீழ்ஆலத்தூர் ஏரியில் ரூ.35 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி ஜி.லோகநாதன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் கே.எம்.ஐ.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏரியில் பூஜை செய்து தூர்வாரும் பணியை வேலூர் மாவட்ட கலெக்டர் அ.சண்முகசுந்தரம் தொடங்கி வைத்துப் பேசினார்.

    வேலூர் மாவட்டத்தில் 101 ஏரிகளில் 42 ஏரிகளில் ஏற்கனவே ரூ.8.14 கோடியில் பணிகள் முடிக்கப்பட்டு, ஏறக்குறைய 10 ஆயிரம் ஏக்கர் நிலம் நீர்ப்பாசனம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பருவ மழை சரியான நேரத்தில் பெய்யும் பட்சத்தில் அனைத்து ஏரிகளும் நிரம்பி, வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படாது. கால்நடைகளுக்கான குடிநீர், விவசாய நீர்ப்பாசன தேவைகள் நிறைவடையும்.

    4-ம் கட்டமாக ஏற்கனவே பணிகள் முடிக்கப்பட்ட 42 ஏரிகளை தவிர, கூடுதலாக 14 ஏரிகள் குடிமராமத்துப் பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ரூ.44.69 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீட்டில் 18 கிலோ மீட்டர் கரைகளை பலப்படுத்தவும், 110 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஏரிக்குள் வரத்துக்கால்வாய், வெளியே நிரம்பி வழியும் கால்வாய், மற்றொரு ஏரிக்கு உள்வரத்து கால்வாய் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    கீழ்ஆலத்தூர் ஏரி 75 கோடி லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டதாகும். இது, இப்பகுதியில் உள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்கும் முக்கிய ஏரியாகும். மாவட்ட குடிமராமத்துப் பணிகளில் 101 ஏரிகளில் 41 ஏரிகள் 3-வது கட்டமாக பணிகள் நடந்து முடிந்துள்ளது. ரூ.8.14 கோடியில் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் விவசாய பாசன வசதி பெறும் வகையில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 4-வது கட்டமாக 14 ஏரிகளில் ரூ.4.69 கோடியில் பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முடியும் நிலையில் கூடுதலாக 3 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று 1,600 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தினர் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் உள்ளனர். அனைவருக்கும் கபசுர குடிநீர், முதல் தவணையாக 4 நாள் வழங்கி முடித்துள்ளோம். இதேபோல் நிலவேம்பு கசாயம் தினமும் வழங்கி வருகிறோம். அரசு நிறுவனத்தின் மூலம் 2 ஆயிரம் கிலோ கபசுர குடிநீர் சூரணம் வரவழைத்துள்ளோம். நோய் எதிர்ப்பு சக்திக்காக அங்கீகரிக்கப்பட்ட சித்த மருந்துகளுடன் வைட்டமின் ‘சி‘ போன்ற சில ஆங்கில மருந்துகளையும் சேர்த்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம்.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை செயற்பொறி யாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் குண சீலன், உதவி பொறியாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணைச் செயலாளர் எஸ்.வி.கே.மோகன், மாவட்ட பிரதிநிதி சொக்கலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நா.ரமேஷ்குமார், பா.கலைச்செல்வி, கூட்டுறவு வங்கி தலைவர் டி.கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×