search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முககவசம் அணிந்து பணியில் ஈடுபட்ட தொல்லியல் துறை அலுவலர்கள், பணியாளர்கள்
    X
    முககவசம் அணிந்து பணியில் ஈடுபட்ட தொல்லியல் துறை அலுவலர்கள், பணியாளர்கள்

    கீழடி அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கின

    கொரோனா ஊரடங்கு காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்ட கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் நேற்று முதல் மீண்டும் தொடங்கின.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடியில் ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு முதல் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. இந்த 5 கட்ட அகழாய்வின் போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டன.

    இதையடுத்து தொடர்ந்து 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெறும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது.

    கீழடியிலும், அதன் பின்னர் கொந்தகை, அகரம் பகுதியிலும் அகழாய்வு நடைபெற்று வந்தது. இதில் கீழடியில் பெரிய, சிறிய பானைகள் கண்டுபிடிக்கப்பட்டன. கொந்தகையில் நடைபெற்ற பணியின் போது முதுமக்கள் தாழி, பானைகள், மனித எலும்புகள் ஆகியவையும், அகரம் பகுதியில் பானை ஓடுகளும் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டன. இந்த 6-வது கட்ட அகழாய்வு பணி வருகிற செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அகழ்வாராய்ச்சி முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஏற்கனவே தோண்டப்பட்ட குழிகள் தார்ப்பாய்களால் மூடப்பட்டன. மேலும் அங்கு பார்வையாளர்கள் வராமல் தடுக்கும் வகையில் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டன.

    கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டு இருந்த அகழாய்வு பணிகள் நேற்று முதல் தொடங்கின. தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த பணியில் தொல்லியல் அலுவலர் ஆசைத்தம்பி மற்றும் பணியாளர்கள் முக கவசம் அணிந்து ஈடுபட்டனர்.

    கீழடி மற்றும் அகரம் பகுதியில் மட்டும் நேற்று பணிகள் நடைபெற்றன. கொந்தகை பகுதியில் பணி இன்னும் தொடங்கவில்லை. 6-வது கட்ட அகழாய்வு நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடங்கியதை அறிந்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கான அகழாய்வு காலத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    Next Story
    ×