search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கி அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தியபோது எடுத்த படம்
    X
    வங்கி அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தியபோது எடுத்த படம்

    சுய உதவிக்குழு பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் கடன்- நாராயணசாமி ஆலோசனை

    ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சுய உதவிக்குழு பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் கடன் வழங்குவது குறித்து வங்கி அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:

    கொரோனா வைரஸ் ஊரடங்கால் கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை பாதுகாத்திட புதுச்சேரி ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கீழ் செயல்படும் 2,804 சுய உதவிக்குழுக்களில் உள்ள 37,003 உறுப்பினர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய வங்கிகள் மூலம் கடன் உதவி அளிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.37 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

    காரைக்கால் மாவட்டத்தில் செயல்படும் 784 சுய உதவிக் குழுக்களின் 10,785 உறுப்பினர்கள் பயன்பெறும் வகை யில் கடன் தொகை சுமார் ரூ.10 கோடியே 78 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கடனை பெற்ற பயனாளிகள் 6 மாதங்களுக்கு பிறகு தவணை தொகையை திரும்பச் செலுத்தி 30 மாத தவணைக்குள்ளாக கட்டி முடிக்க வேண்டும்.

    புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இதுவரை 624 சுய உதவிக்குழுக்களிலுள்ள 8,337 உறுப்பினர்களுக்கு பல்வேறு வங்கிகள் மூலம் ரூ.7 கோடியே 68 லட்சத்து 40 ஆயிரம் கடன் வழங்கப்பட்டது. மீதமுள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு விரைவில் கடன் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சட்டசபை வளாகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி, சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் இந்தியன் வங்கியின் துணை பொதுமேலாளர் வீரராகவன், நபார்டு வங்கி அதிகாரி உமா குருமூர்த்தி, இந்தியன் வங்கியின் முன்னோடி வங்கி மேலாளர் உதயகுமார் மற்றும் அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அவர்கள் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க உறுதி அளித்தனர்.
    Next Story
    ×