search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்னவெங்காயம் சாகுபடிக்காக நடைபெற்ற உழவு பணி
    X
    சின்னவெங்காயம் சாகுபடிக்காக நடைபெற்ற உழவு பணி

    சின்னவெங்காயம் சாகுபடி செய்ய உழவு பணி தொடங்கிய விவசாயிகள்

    தொண்டாமுத்தூர் பகுதி விவசாயிகள், சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய உழவு பணி தொடங்கியுள்ளர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்வது தொண்டாமுத்தூர் பகுதிதான். இங்குள்ள தீனம்பாளையம், காளம்பாளையம், மாதம்பட்டி, செம்மேடு, நரசீபுரம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் ஆண்டுதோறும் 2 முறை சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    அதாவது ஜனவரி மாதத்தில் சாகுபடி செய்யும்போது விதை மூலமும், மே மாதத்தில் சாகுபடி செய்யும்போது காய் மூலமும் இந்த பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை அறுவடை செய்து விட்டனர். எனவே காலியாக உள்ள நிலத்தை விவசாயிகள் மீண்டும் பண்படுத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக நரசீபுரம், போளுவாம்பட்டி, தொண்டாமுத்தூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய உழவு பணி நடந்து வருகிறது. இதற்காக விவசாயிகள் டிராக் டர் மூலம் மண்ணை உழுது வருகிறார்கள். இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:

    தொண்டாமுத்தூர் பகுதியில் ஜனவரி மற்றும் மே மாத இறுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படும். அடுத்த மாதத்தில் சாகுபடி பணியை தொடங்க இப்போதில் இருந்தே நிலத்தை பண்படுத்தி தயார் செய்து, இயற்கை உரம் போட்டு வைப்போம். இந்த மாத இறுதியிலேயோ அல்லது அடுத்த மாதத்திலேயோ கோடை மழை பெய்யும்.

    மழை பெய்யும்போது உரம் மண்ணில் கலந்து விடுவதால், மண் சத்தாக மாறிவிடும். சில இடங்களில் பசுந்தாள்கள் பயிரிடுவார்கள்.

    ஒரு மாதம் கழித்து அந்த பசுந்தாள்களை வெட்டி உரமாக்கிவிட்டு, அதில் சின்னவெங்காயத்தை பயிரிடும்போது நல்ல விளைச்சல் இருக்கும். எனவேதான் இப்போதில் இருந்தே மண்ணை பண்படுத்தி வருகிறோம்.

    சில இடங்களில் சொட்டுநீர் பாசனம் மூலமும் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படும். சில இடங்களில் மழையை நம்பி வேலையை தொடங்குவார்கள். நாங்கள் கோடை மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். கடந்த ஆண்டில் பரவலாக மழை பெய்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. அதுபோன்று இந்த ஆண்டும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் கிராமப்பகுதிகளில் விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்க சிரமமாகதான் இருக்கிறது. எனினும் கிடைத்த ஆட்களை வைத்து வேலை செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×