search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் நுழைவு பாதையில் உள்ள கேட் மூடப்பட்டு இருக்கும் காட்சி.
    X
    வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் நுழைவு பாதையில் உள்ள கேட் மூடப்பட்டு இருக்கும் காட்சி.

    வெள்ளியங்கிரி மலையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

    தடையை மீறி பக்தர்கள் செல்வதை தடுக்க வெள்ளியங்கிரி மலையில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
    கோவை:

    கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்வார்கள். இங்கு 7 மலை கடந்து சென்று சுயம்புலிங்கத்தை பக்தர்கள் தரிசிப்பது வழக்கம்.

    இங்கு சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்படும். மலை மீது செல்ல வேண்டும் என்பதால் அங்கு ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மலை மீது செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து ஏராளமான பக்தர்கள் மலை ஏறி சென்று சுயம்புலிங்கத்தை வழிபட்டுவிட்டு திரும்பினார்கள். இதற்கிடையே கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் முன்பே மலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    அத்துடன் தடையை மீறி பக்தர்கள் மலை மீது சென்றுவிடக்கூடாது என்பதற்காக அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லும் நுழைவு பாதையில் உள்ள கேட் போட்டு மூடப்பட்டு உள்ளது. அத்துடன் அங்கு வனத்துறையினர் நியமிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்த பாதை தவிர மற்ற பாதை வழியாக மலை மீது யாரும் சென்றுவிடக்கூடாது என்பதற்காக வனத்துறையினர் ரோந்தும் சென்று வருகிறார்கள்.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதுதவிர வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள், யானை பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு, தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் பூண்டி கோவிலுக்கு வருவதற்கு முன்பு முட்டத்துவயலில் உள்ள சோதனை சாவடியும் மூடப்பட்டு உள்ளது. அங்கும் வனத்துறையினர் அமர்ந்து, அந்த வழியாக வரும் நபர்கள் குறித்து கண்காணித்து வருகிறார்கள். இந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். வெளிநபர்கள் யாரும் வந்தால் தடுத்து நிறுத்தி அவர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி, எச்சரித்து திருப்பி அனுப்பி வைக்கிறார்கள்.

    எனவே தற்போது தடை விதிக்கப்பட்டு உள்ளதால், பக்தர்கள் யாரும் மலை மீது செல்ல முயற்சி செய்ய வேண்டாம். தடையை மீறி மலை மீது செல்ல யாரும் முயற்சி செய்தால், வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நியமிக்கப்பட்ட வனத்துறையினர், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள மலைக்கு செல்லும் இடம் மற்றும் மலையை சுற்றி உள்ள பகுதியில் தீவிரமாக ரோந்தும் சென்று வருகிறார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×