search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ராணிப்பேட்டை சிப்காட்டில் 29 தொழிற்சாலைகளுக்கு ரூ.6.70 கோடி அபராதம்

    ராணிப்பேட்டையில் சுற்றுச்சூழலை மாசுபடுத்திய குற்றத்திற்காக 29 தொழிற்சாலைகள் ரூ.6 கோடியே 70 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அபராதம் விதித்துள்ளது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டில் செயல்பட்டு வரும் ரசாயன தொழிற்சாலை மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனங்களில் மழைநீர் வடிகாலில் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவுநீரை திறந்து விட்டதாக பொதுமக்கள் புகார் செய்தனர்.

    ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர்கள் அங்கு ஆய்வு செய்து ரசாயன மாதிரிகளை சேகரித்தனர். விசாரணை முடிந்து குற்றவியல் நடைமுறை சட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இதில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மழைநீர் வடிகாலில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் தொழிற்சாலையில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் தொழிற்சாலையை சுற்றி வெளிப்புறத்தில் இருந்து நீர் உட்புகாமல் கால்வாய்கள் வெட்ட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. சுத்திகரிக்காத ரசாயன கழிவுநீரை திறந்துவிட்டு மாசு படுத்திய குற்றத்திற்காக ரூ.18.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதற்கிடையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பின்படி மிக அதிகமாக மாசடைந்துள்ள தொழில் பகுதியான ராணிப்பேட்டையில் செயல்பட்டு வரும் மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் குறித்த ஆய்வினை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது. இதன் அடிப்படையில், ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் 2 தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் 2 மத்திய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகிய 6 பெரிய நிறுவனங்கள் மாசுபடுத்தும் கழிவுநீர் வெளியேற்றியதாக கண்டறியப்பட்டது.

    இந்த பெரிய நிறுவனங்களின் மீது ரூ.1 கோடி அபராதம் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இது தவிர ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் 23 சிறு நடுத்தர தொழிற்சாலைகள் கழிவுநீரை வெளியேற்றி மாசுபடுத்துவது கண்டறியப்பட்டது.

    இந்த தொழிற்சாலைகளுக்கு ரூ.75 லட்சம் அபராதம் விதிக்க வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பரிந்துரை செய்தார்.

    இதனை ஏற்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழலை மாசுபடுத்திய குற்றத்திற்காக 29 தொழிற்சாலைகள் ரூ.6 கோடியே 70 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அபராதம் விதித்துள்ளது.

    இந்த அபராதத்தை 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தொழிற்சாலை மாசுபாட்டால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறியும் நிபுணர்குழு ஒன்றை அமைத்து முழுமையாக ஆய்வு செய்து சுற்றுச்சூழல் முழுமையான இழப்பீடுகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×