search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்பழகன் எம்எல்ஏ
    X
    அன்பழகன் எம்எல்ஏ

    சிறுபான்மையினர் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை- அன்பழகன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

    சிறுபான்மையினர் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை என்று அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் சார்பில் சிறுபான்மையினர் தின விழா வக்பு வாரியத்தில் இன்று நடந்தது. விழாவில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    சிறுபான்மையினருக்கு விழா எடுப்பது மட்டும் அரசின் கடமையாக இருக்கக் கூடாது. அவர்களின் நலனில் அக்கறை எடுத்து பாதுகாக்க வேண்டும். இந்த ஆட்சியில் 4 ஆண்டாக சிறுபான்மையினர் நலனுக்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்த வில்லை. சிறுபான்மை இன மக்கள் கணக்கெடுப்பு நடத்தவில்லை.

    பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடும் செய்ய வில்லை. தலைவர் நியமிக்கப்படாததால் வக்பு வாரியம் செயலிழந்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகத்தில் இருந்து தனியாக சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகத்தை பிரிக்க வேண்டும்.

    தகுதியான முஸ்லிம், கிறிஸ்தவ மக்களுக்கு அரசின் சார்பில் இலவசமனை பட்டா வழங்கவேண்டும். முஸ்லிம் சொத்துக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபான்மையின மக்களுக்கு சிறுதொழில் தொடங்குவதற்காக கடன் வழங்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    4 ஆண்டில் ஒருவருக்கு கூட இந்த கடனுதவி வழங்க வில்லை. என் தொகுதியில் 9 பள்ளிவாசல்கள், 2 தர்காக்கள் உள்ளன. அதற்கு முறையாக முத்தவல்லி மற்றும் உலமாக்கள் நியமிக்க வில்லை. முத்தவல்லி, மற்றும் உலமாக்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திர உதவித்தொகை இன்றுவரை வழங்கவில்லை.

    நீண்ட நாட்களுக்கு பிறகு காலியாக இருந்த டவுன் பகுதிக்கான காஜியார் நியமிக்கப்பட்டுள்ளார். அதிலும் அரசியல் கண்ணோட்டத்தோடு புதுவை நகர பகுதியில் இருந்து டவுன் காஜியார் நியமிக்கப்படாமல் வில்லியனூர் கொம்யூனில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளார்.

    காரைக்கால் மாவட்டத்தில் 5 காஜியார்கள் உள்ள நிலையில், புதுவைக்கு ஒரே ஒரு காஜியார் மட்டும் நியமனம் செய்யப்பட்டிருப்பது தவறான ஒன்றாகும். புதுவையில் ஒவ்வொரு கொம்யூன் பஞ்சாயத்திற்கும் காஜியார் நியமனம் செய்யவேண்டும்.

    வெளிநாட்டில் பணி புரியும் முஸ்லிம் குடும்பத்தலைவர்களின் பெயர்கள் ரே‌ஷன் அட்டையில் இருந்து நீக்கப்படுகின்றன. அதனால் குடும்பத்தில் உள்ள பெண்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இதனை அரசு சரி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×