search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுப்பு - தடையை மீறி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

    உசிலம்பட்டியில் தடையை மீறி மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    உசிலம்பட்டி:

    உசிலம்பட்டி பகுதியில் 58 கிராமங்களில் உள்ள 33 கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து பாசன வசதி செய்து தரும் திட்டமாக 58 கிராம கால்வாய் திட்டம் 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    22 ஆண்டுகள் நீண்ட இழுபறியாக பணிகள் நடைபெற்று கடந்த ஆண்டில் திட்டம் நிறைவு பெற்றது.

    வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியாக உயர்ந்தால் மட்டுமே கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும் என்ற நிலையில் கடந்த ஆண்டிலேயே சோதனை ஓட்டமும் 2 முறை நடத்தப்பட்டது.

    தற்போது தமிழகத்தின் பிற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் உசிலம்பட்டி பகுதியில் சாரல் மழை மட்டுமே பெய்கிறது. குறிப்பாக இந்த கால்வாய் பாசனத்தின் கீழ் வரும் 33 கண்மாய்களும் தற்போது வரையில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.

    எனவே கால்வாயில் தண்ணீர் விட்டு கண்மாய்களை நிரப்பினால் நிலத்தடி நீர்மட்டமும், விவசாயம் மட்டுமல்லாமல் குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும் என பாசன விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கையும், போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

    இன்று (4-ந் தேதி) முதல் உசிலம்பட்டி தேவர் சிலை அருகே தொடர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.

    ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பிலும் விவசாயிகள் போராட்டத்துக்கு திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனை கண்டித்து தேனி மெயின் ரோட்டில் விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர். போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு வனிதா, துணை சூப்பிரண்டு ராஜா, தாசில்தார் செந்தாமரை ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உடன்பாடு ஏற்படாததால் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
    Next Story
    ×