search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல்பட்டு மாவட்டத்தை தொடங்கி வைத்த காட்சி.
    X
    செங்கல்பட்டு மாவட்டத்தை தொடங்கி வைத்த காட்சி.

    காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்து செங்கல்பட்டு மாவட்டம் உதயமானது

    புதிய மாவட்டங்களில் கடைசியாக இன்று 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி ஏற்கனவே 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில் மக்கள் தொகை அடிப்படையில் நிர்வாக வசதிக்காக மேலும் 5 மாவட்டங்கள் தொடங்கப்படுவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி 33-வது மாவட்டமாக தென்காசி, 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி தொடங்கி வைக்கப்பட்டது.

    35-வது மாவட்டமாக நேற்று திருப்பத்தூர் மாவட்டத்தையும், 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

    அறிவிக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் கடைசியாக இன்று 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் உதயமானது. இதற்கான விழா செங்கல்பட்டு அருகே வேண்பாக்கத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

    செங்கல்பட்டு மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த காட்சி.

    விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழா மேடையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது தமிழக அரசு செய்துள்ள சாதனைகளையும் திட்டங்களையும் பட்டியலிட்டு சிறப்புரையாற்றினார்.

    அப்போது 113 கோடியே 93 லட்சம் செலவில் செய்து முடிக்கப்பட்ட 181 திட்டப் பணிகளை அவர் திறந்து வைத்தார்.

    ரூ.128 கோடியே 9 லட்சம் மதிப்பிலான 213 புதிய திட்டப்பணிகளுக்கும் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

    சுமார் 90 கோடி மதிப்பில் 5 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    விழாவுக்கு வந்த அனைவரையும் தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்றார். அரசு கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா திட்ட விளக்கவுரை நிகழ்த்தினார்.

    இதில் அமைச்சர்கள், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் செய்தி துறை இயக்குனர் சங்கர், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் நன்றி கூறினார்.

    பிரமாண்ட மேடையில் நடைபெற்ற புதிய மாவட்ட தொடக்க விழா நிகழ்ச்சிகளை நேரடியாக பார்க்க விழா பந்தலில் ஆங்காங்கே பெரிய திரைகள் அமைக்கப்பட்டிருந்தது. சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் வந்தபோது முக்கிய இடங்களில் பொது மக்கள் கூடி நின்று அவருக்கு வரவேற்பு கொடுத்தனர். அ.தி.மு.க. கட்சி கொடிகளும் நடப்பட்டிருந்தன.

    செங்கல்பட்டு மாவட்டம் உதயமானதற்கு நன்றி தெரிவித்து நகரம் முழுவதும் ஏராளமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. இதனால் செங்கல்பட்டு நகரமே விழாக்காலம் பூண்டிருந்தது.
    Next Story
    ×