search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு
    X
    நீட் தேர்வு

    நீட் தேர்வில் சென்னை மாணவிக்காக ஆள்மாறாட்டம் செய்த மர்ம பெண் யார்?

    நீட் தேர்வில் சென்னை மாணவிக்காக ஆள்மாறாட்டம் செய்த மர்ம பெண் யார்? இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் மகன் உதித் சூர்யா. இவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் பேரில் உதித் சூர்யா, டாக்டர் வெங்கடேசன் ஆகியோரை கடந்த மாதம் 26-ந் தேதி தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மேலும் சிலர் ஆள் மாறாட்டம் மூலம் பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த மாணவன் பிரவீன், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ், வாணியம்பாடியைச் சேர்ந்த மாணவர் இர்பானின் தந்தை முகமது சபி ஆகியோரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். மாணவர் இர்பான் சேலம் கோர்ட்டில் சரணடைந்தார்.

    ஆள் மாறாட்ட வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சி.பி.சி. ஐ.டி. போலீசார் சந்தேகமடைந்தனர். ஒரே பெயர் முகவரியில் இரு இடங்களில் தேர்வு எழுதியவர் குறித்த விபரங்களை உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமையிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கேட்டிருந்தனர்.

    அவர்கள் கொடுத்த விபரத்தின் அடிப்படையில் சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்த தர்மபுரி மாணவி பிரியங்கா, அவரது தாயார் மைனாவதி ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    கைதான இருவரும் தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி. இனஸ்பெக்டர் சித்ரா தேவி தலைமையிலான போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். ஒரே முகவரியில் 2 இடங்களில் தேர்வு எழுதியது எப்படி? பிரியங்காவுக்காக தேர்வு எழுதிய பெண் யார்? இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

    நீண்ட நேர விசாரணைக்கு பின்னர் தாய், மகள் இருவரும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்பு இருவரும் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். அவர்களை வருகிற 25-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணையில் ஆள்மாறாட்டத்தில் மாணவி பிரியங்காவுக்காக வேறொரு பெண் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண் யார்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக மாணவியின் தாயார் மைனாவதியிடம் போலீசார் தகவல்களை திரட்டினார்கள்.

    அப்போது அவருக்கு மகளை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் தரகர்களிடம் பேசியுள்ளார்.

    ஏற்கனவே தலைமறைவாக உள்ள தரகர்கள் ஜோசப், ரஷீத், ஆகியோர் மூலமாக மைனாவதி ஆள் மாறாட்டத்துக்கு லட்சக் கணக்கில் பணம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    ஆள்மாறாட்ட வழக்கில் முதலில் பிடிபட்ட மாணவர் உதித் சூர்யா. அவரது தந்தை வெங்கடேசன் பணம் கொடுத்து ஆள்மாறாட்டத்துக்கு ஏற்பாடு செய்ததுபோல பலர் மோசடியில் ஈடுபட்டனர். அதே வழியில் தான் மைனாவதியும் மகளை டாக்டராக்கி பார்க்க ஆசைப்பட்டு மோசடியில் இறங்கி உள்ளார்.

     

    மாணவி , அவரது தாயார் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து சென்ற காட்சி.

    பிரியங்கா வழக்கில் ஆள் மாறாட்டம் மட்டுமல்ல.மதிப்பெண் சான்றிதழை திருத்தியும் மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு மருத்துவ துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கலாம் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த அதிகாரிகள் யார் என்பதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    பிரியங்காவுக்காக தேர்வு எழுதிய பெண் யார் என்ற கேள்வியையும் மைனாவதியிடம் கேட்டனர். அதற்கு அவர் இடைத்தரகர்கள் மூலமாகவே ஏற்பாடு செய்ததாக கூறினார். அந்த தரகர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே மாணவி பிரியங்கா படித்த சென்னையில் மருத்துவ கல்லூரி முதல்வர், மருத்துவ கண்காணிப்பாளர் பொன்னம்பல நமச்சிவாயம், கல்லூரி பெண் அலுவலர் ஒருவர் ஆகியோரையும் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.

    அவர்கள் தேனி சி.பி.சி.ஐ.டி போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்கள். பிரியங்கா தொடர்பான ஆவணங்களை அவர்கள் சமர்ப்பித்தனர்.

    பிரியங்கா, அவரது தாயார் மைனாவதி ஆகியோர் தேனி மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட போது அவர் நீட் தேர்வு ஆள் மாறாட்டம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

    இந்த வழக்கில் முக்கிய நபரான புரோக்கர் ரஷீத்தை ஏன் கைது செய்யவில்லை? சான்றிதழ் சரி பார்ப்பு குழுவிடம் விசாரணை நடத்தாதது ஏன்? அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்டார்.

    அதற்கு சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பதில் அளித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி பன்னீர் செல்வம் நீட் தேர்வு முறை கேட்டுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் விசாரியுங்கள் என்று கூறினார்.

    இதையடுத்து ஆள் மாறாட்டம் செய்து மாணவர்கள் சேர்ந்த பல்வேறு மருத்துவ கல்லூரிகளுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர்.

    மாணவர் சேர்க்கையின் போது சான்றிதழ் சரிபார்த்த அலுவலர்கள் உரிய ஆவணங்களுடன் தேனியில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    மேலும் மதிப்பெண் திருத்தப்பட்டது குறித்தும் உரிய விளக்கங்கள் அளிக்க வேண்டும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் தொடர்ச்சியாக சம்மந்தப்பட்ட கல்லூரி அலுவலர்கள் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகின்றனர். அவர்களிடம் சி.பி. சி.ஐ.டி. போலீசார் கிடுக்கிப் பிடி விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை நாளை (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப் போவதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் தெரிவித்திருந்தனர். அந்த அறிக்கையில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்ற விவரங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

    கோர்ட்டு கண்டித்ததை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கையாக முறை கேட்டில் ஈடுபட்ட தரகர்கள், அதிகார்கள் ஆகியோரை பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

    நீட்தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஏற்கனவே சென்னை மாணவி அபிராமி சிக்கினார். அவரது போட்டோ வித்தியாசமாக இருந்ததால் அவர் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.

    அவரது போட்டோவை தடயவியல் சோதனைக்காக போலீசார் அனுப்பி உள்ளனர். தடயவியல் சோதனை முடிந்து வந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். மோசடி உறுதி செய்யப்படாததால் மாணவி அபிராமியை போலீசார் விடுவித்தனர்.

    தடயவியல் சோதனை முடிவில் மாணவி அபிராமி முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டால் அவர் மீது போலீசார் நடவடிக்கை பாயும்.

    Next Story
    ×