search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விநாயகர் சிலை
    X
    விநாயகர் சிலை

    விநாயகர் சதுர்த்தி விழாவில் பட்டாசுகள் வெடிக்க கூடாது - கலெக்டர் கதிரவன் அறிவுரை

    ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பட்டாசு வெடிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் கூறி உள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் சிலைகள் அமைப்பது மற்றும் கரைப்பது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் இந்து சமய பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கதிரவன் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகச்சிறப்பாக பாதுகாப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலை வைப்பதற்கு திட்டமிட்டப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் சிலை வைக்கும் இடத்திற்குரிய அனுமதி, ஒலி அமைப்பதற்குரிய அலுவலரிடமிருந்தும் மற்றும் தீயணைப்புத்துறை போன்ற துறைகளின் தடையின்மை சான்றுகள் பெற்றபின் அரசால் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தினை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பாளரால் சிலை அமைக்கப்படவுள்ள இடம் தணிக்கை செய்யப்பட்டு பரிந்துரை செய்து, சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி பரிசீலனை செய்தபின், சிலை வைப்பதற்கான அனுமதி வழங்கப்படும். நிறுவப்படவுள்ள சிலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பற்ற பொருட்களான, ரசாயன அல்லது தடைசெய்யப்பட்ட வர்ணங்களை உபயோகப்படுத்தாமல் சுத்தமான களிமண் மற்றும் இயற்கை வர்ண பொருட்களால் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் கரைக்கப்படவுள்ள சிலைகள் அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே கரைக்கப்பட வேண்டும், விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் வாய்க்கால்களில் கரைக்கக்கூடாது.

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தடைசெய்யப்பட்ட பொருட்களால் ஆன விநாயகர் சிலைகள் தணிக்கையின்போது கண்டறியப்பட்டாலும், ஈரோடு மாவட்டத்தில் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் வாய்க்கால்களில் கரைக்கப்படுவது கண்டறியப்பட்டாலும் அல்லது உரிய அனுமதியின்றி விநாயகர் சிலை நிறுவப்பட்டாலும், அச்சிலையின் உரிமையாளர் அல்லது பொறுப்பாளர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விநாயகர் சிலை அமைக்கப்படும் போது மேற்கூரைகள் தகடுகளாலும், போதிய அளவு தண்ணீரும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அமைக்கப்பட வேண்டும். விழாவின்போது பட்டாசு வெடிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

    மேலும் ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் மிக அமைதியான முறையில் நடத்திட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, வருவாய் கோட்டாட்சியர் (ஈரோடு) முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×