என் மலர்

  செய்திகள்

  போராட்டம்
  X
  போராட்டம்

  விவசாயிகள் காத்திருப்பு போராட்ட அறிவிப்பு - ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈரோட்டில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியானதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  ஈரோடு:

  தமிழகத்தில் ஈரோடு, கோவை, சேலம் ,திருப்பூர் தர்மபுரி, நாமக்கல், திருவண்ணாமலை உட்பட 13 மாவட்டங்களில் விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு 13 மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  ஈரோடு மாவட்டத்திலும் விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஈரோடு மூலக்கரை, பெருந்துறை, சென்னிமலை போன்ற பகுதிகளில் தற்போது விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

  இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சில இடங்களில் போலீசாருடனும் உயர் மின் கோபுரம் அமைக்கும் அதிகாரிகளுடனும் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இன்னும் சில இடங்களில் விசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.

  இந்நிலையில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வியாழக்கிழமை) ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இதுகுறித்து உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறும்போது, 1885 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தந்தி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று விவசாயிகளுக்கு என்று புதிய சட்டத்தை இயற்ற வேண்டும். உயர் மின் கோபுரம் அமைக்கும் போது விவசாய நிலத்தில் அமைக்காமல் சாலையோரமாக கேபிள் மூலம் எடுத்துச் செல்ல வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்ட உயர் மின் கோபுரங்கள் மற்றும் வழித்தடங்களுக்கு முறையான இழப்பீடு மற்றும் வாடகை வழங்க வேண்டும். விவசாயிகள் அனுமதியின்றி காவல்துறை உதவியுடன் விவசாயிகளை மிரட்டி அத்துமீறி செய்யும் வேலையை நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கூட்டு இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

  இந்நிலையில் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து உள்ளனர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது ஆனால் திட்டமிட்டபடி காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றும் விவசாயிகள் அறிவித்திருந்தனர். மேலும் ஈரோடு சம்பத் நகரில் இருந்து ஊர்வலகமாக செல்லவும் முடிவு செய்துள்ளனர்.

  இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகம் கொங்கு கலையரங்கம் போன்ற பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட போலீசார் டவுன் டிஎஸ்பி ராதா கிருஷ்ணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  கலெக்டர் அலுவலகத்திற்குள் விவசாயிகள் வராத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன மேலும் அதிவிரைவு படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்த காத்திருப்பு போராட்டத்தில் வெளி ஊர்களிலிருந்து வரும் விவசாயிகளை தடுக்கும் வகையில் சோதனை சாவடி முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

  ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி அங்குலம் அங்குலமாக சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர் ஈரோடு சோலார், திண்டல் ,ரங்கம் பாளையம் கருங்கல்பாளையம் காவிரி சோதனைச்சாவடி போன்ற பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  மேலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ரகசியமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதனால் ஈரோடு மாநகர் பரபரப்பான சூழ்நிலையில் உள்ளது.
  Next Story
  ×