
தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசியதாக கூறி தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நாகை புதிய பஸ் நிலையம் அருகே அவுரித்திடலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய தலைவர்கள் நிர்மல்பாண்டியன், முருகேசபாண்டியன், இளைஞரணி செயலாளர் மார்ட்டின் உள்பட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனை அவதூறாக பேசியதாக மு.க. ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். அப்போது மு.க.ஸ்டாலின் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தனர்.அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையிலான போலீசார், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.