search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெடித்த செல்போனை படத்தில் காணலாம்.
    X
    வெடித்த செல்போனை படத்தில் காணலாம்.

    செல்போன் வெடித்ததற்கு தரமற்ற பேட்டரி காரணமா?- போலீஸ் விசாரணை

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் செல்போன் பேசியபோது வெடித்ததற்கு, தரமற்ற பேட்டரி காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள புலியரசி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 30).

    இவர் நேற்று காலை, சூளகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, ஹெல்மெட் அணிந்தபடி சென்ற அவர், தனது செல்போனை ஹெல்மெட்டுக்குள் வைத்தவாறு பேசியபடியே வாகனத்தை ஓட்டிச்சென்று உள்ளார். அப்போது திடீரென்று அதிக வெப்பம் காரணமாக, செல்போன் வெடித்துள்ளது.

    இதில் ஆறுமுகத்தின் காது, கன்னம் ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக, ஆறுமுகத்தை மீட்டு, சூளகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு ஆறுமுகம் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சிகிச்சை பெற்று வரும் ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நேற்று நான் செல்போன் பேசியபடி மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றேன். தலையில் ஹெல்மெட் அணிந்து இருந்தேன். ஹெல்மெட்டுக்குள் செல்போன் இருந்ததால் நான் பேசிகொண்டு சென்றேன். அப்போது திடீரென்று செல்போன் வெடித்தது. என்னுடைய ஹெல்மெட் தள்ளிபோய் விழுந்தது. நானும் வண்டியில் இருந்து தூக்கிவீசப்பட்டு சுவர் ஓரம் போய் விழுந்தேன்.

    இதில் என் காது, கன்னம் உள்ளிட்ட பகுதிகளில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அங்கிருந்தவர்கள் என் ரத்தத்தை துடைத்து அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தனர். ரத்தம் வராமல் தடுக்க மருந்து தடவினர். பின்னர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன். லேசான காயம் என்பதால் எனக்கு எந்த ஆபத்தும் இல்லை. நான் வாங்கிய செல்போன் பிரபல நிறுவனத்தின் செல்போன் ஆகும். அது எப்படி வெடித்தது என்று தெரியவில்லை.

    செல்போன் வெடித்து காயம் அடைந்த ஆறுமுகத்தை படத்தில் காணலாம்.


    இதுகுறித்து செல்போன் கடை அதிபர் ஒருவரிடம் கேட்டேன். அவர், ஹெல்மெட்டுக்குள் போன் இருந்தபோது காற்றினால் ஹெல்மெட் அசைந்து போனில் உராய்ந்ததால் போனுக்குள் உள்ள உதிரி பாகங்கள் உரசி தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறினார்.

    நான் அதிக விலை கொடுத்து இந்த போனை வாங்கினேன். ஆனால் என்ன காரணத்திற்காக அது வெடித்தது என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செல்போன் வெடித்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வெடித்த செல்போனையும், பேட்டரியையும் போலீசார் ஒரு செல்போன் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

    தரமற்ற பேட்டரி காரணமாக வெடித்ததா? அல்லது போலி நிறுவனம் தயாரித்த செல்போனை வாங்கி பயன்படுத்தியதால் வெடித்ததா? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.

    செல்போன்களை பயன்படுத்துவதில் கவனம் தேவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    செல்போன்கள் பயன்படுத்துவதில் மிகவும் கவனம் தேவை. தரமான நிறுவனங்களின் செல்போன்களையும், பேட்டரிகளையும் வாங்கி பயன்படுத்த வேண்டும். மலிவாக கிடைக்கும் என்பதற்காக தரமற்ற செல்போன்களையும், பேட்டரிகளையும் பயன்படுத்த கூடாது.

    குறைந்த அளவு அல்லது அதிக அளவு மின்சாரம் இருக்கும்போது செல்போன்களை சார்ஜ் போடக்கூடாது. சிலர் இரவு தூங்கப்போகும்போது செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு காலையில் சார்ஜரை அணைத்துவிட்டு செல்போனை எடுப்பார்கள். அப்படி செய்யக்கூடாது.

    குறிப்பிட்ட நேரம் மட்டுமே செல்போனை சார்ஜ் செய்ய வேண்டும். அதேபோல சிலர் 100 சதவீதம் வரை செல்போன் சார்ஜ் ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது தவறு. 95 சதவீதம் சார்ஜ் ஏறிவிட்டாலே செல்போனை எடுத்துவிடலாம். சார்ஜ் போட்டுக்கொண்டே சிலர் போன் பேசுகிறார்கள். அப்படி செய்யக்கூடாது.

    போனில் அதிக அளவு சார்ஜ் இருந்தால் வெப்பம் தாங்காமல் வெடித்துவிடும். பல வீடுகளில் செல்போன்கள் இரவு நேரங்களில் வெடித்து இருக்கின்றன.

    சூளகிரி அருகே ஹெல்மெட்டுக்குள் போனை வைத்து பேசிக்கொண்டு சென்றதால் வெப்பம் தாங்காமல் வெடித்து இருக்கிறது. எனவே யாரும் வண்டியை ஓட்டிக்கொண்டோ அல்லது ஹெல்மெட்டுக்குள் வைத்தோ செல்போன் பேசக்கூடாது. செல்போன் சார்ஜ் போட்டு எடுத்த பிறகு 10 நிமிடங்கள் கழித்தே போன் பேச வேண்டும். சார்ஜில் இருந்து எடுத்த உடனேயே போன் பேசக்கூடாது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×