என் மலர்
செய்திகள்

படப்பை அருகே சாவு ஊர்வலத்தில் வாலிபர் படுகொலை
ஸ்ரீபெரும்புதூர்:
தாம்பரத்தை அடுத்த படப்பை அருகே உள்ள கரசங்கால் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மதன்.இவரது மகன் புஷ்பராஜ் (19).
நேற்று முன்தினம் இரவு அவர் நண்பரின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது மர்ம கும்பல புஷ்பராஜை தாக்கி தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக அதே பகுதியியை சேர்ந்த செந்தில், நைனி ஆகிய 2 பேரை மணிமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே கொலையுண்ட புஷ்பராஜின் உடல் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது இறுதி ஊர்வலம் நடந்தது.
உறவினர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது போதையில் வந்த மர்ம வாலிபர் ஒருவர் அரிவாளுடன் சாவு ஊர் வலத்துக்குள் புகுந்தார். திடீரென அவர் அரிவாளால் அருகில் இருந்தவர்களை சரமாரியாக வெட்டினார்.
சாவு ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் அலறியடித்து ஓடினர். அரிவாள் வெட்டில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவப்பிரகாசம்(40) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் மணிமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ், படப்பையை சேர்ந்த ஏழுமலை, இறந்து போன புஷ்பராஜின் தந்தை மதன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அரிவாளால் வெட்டிய மர்ம வாலிபரை பிடிக்க முயன்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார். காயம் அடைந்த 3 பேருக்கும் படப்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொலைவெறியில் ஈடுபட்ட வாலிபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே நடந்த கொலைக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.






