search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழடியில் 5வது கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்
    X

    கீழடியில் 5வது கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5வது கட்ட அகழாய்வு பணிகளை, தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழடியில் பண்டைய தமிழர் நாகரீகம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிய கடந்த 2015ம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.  

    முதற்கட்டமாக நடந்த இந்த அகழாய்வில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. இதனையடுத்து 2016ம் ஆண்டு 2வது கட்டமாகவும், 2017ம் ஆண்டு 3வது கட்டமாகவும் கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்றது. இதில் கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என சுமார் 1,600க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. தொடர்ந்து 4வது முறையும் ஆய்வு நடந்தது.

    முதல் 4 ஆய்வுகளில் கண்டெடுத்த 14 ஆயிரத்து 500 பொருட்களையும் காட்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக 1 ஏக்கரில் அகழ்வைப்பகம் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.



    ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள ரூ.57 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 5ம் கட்டப்பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மக்களவை தேர்தல், மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகிய காரணங்களால் ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று அகழாய்வு பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இதற்கு தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி துறை அனுமதி வழங்கவில்லை. இதனால் 5வது கட்ட அகழாய்வு பணி ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று கீழடியில் 5வது கட்ட அகழாய்வு பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி  வைத்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், அகழ் வைப்பகம் அமைக்க தமிழக அரசு ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளது. கண்டெடுக்கப்பட்ட 14,638 பொருட்களும் அகழ் வைப்பகத்தில் வைக்கப்படும், பள்ளிக் குழந்தைகளை அருகில் உள்ள அருங்காட்சியகத்துக்கு அழைத்து செல்ல உத்தரவிடப்படும்" என கூறினார்.
    Next Story
    ×