search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பண்ருட்டியில் மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு
    X

    பண்ருட்டியில் மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு

    பண்ருட்டியில் மூதாட்டியை தாக்கி நகை பறித்து சென்ற கொள்ளையனை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜர் நகர் இந்திரா காந்தி சாலையை சேர்ந்தவர் பட்டுச்சாமி. இவரது மனைவி சரசு (வயது70). பட்டுசாமி இறந்து விட்டதால் சரசு மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

    சரசு அவரது வீட்டின் முன்பு இட்லி கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று இரவு சரசு வீட்டில் தூங்கினார். பின்னர் அதிகாலை சரசு வழக்கம்போல் எழுந்து வீட்டின் முன்பக்கவாசலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம மனிதன் சரசுவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றான். உடனே சரசு திருடன்...திருடன்...என்று அலறினார்.

    இதனால் கோபம் அடைந்த மர்ம மனிதன் அங்கு கிடந்த இரும்பு கம்பி யை எடுத்து சரசுவின் தலையில் ஓங்கி அடித்தான். இதில் சரசுவின் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

    உடனே அந்த மர்ம மனிதன் சரசுவின் கழுத்தில் கிடந்த ½ பவுன் தங்க சங்கிலி மற்றும் காதில் கிடந்த ½ பவுன் கம்மல் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.

    அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சரசு, ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கடலூர் போலீஸ் சூப்பிரண்டு சரவணன், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மூதாட்டியை தாக்கி விட்டு நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தனிப்படை போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி.கேமராக்களில் கொள்ளையனின் முகம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். இட்லிகடையில் சாப்பிட வந்தவர்கள் சரசு தனியாக இருப்பதை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்று பல்வேறு கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி போலீஸ் நிலையம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள சரசு வீட்டில் நடந்துள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×