search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 1½ கிலோ கஞ்சாவுடன் 5 வாலிபர்கள் கைது
    X

    குமரி மாவட்டத்தில் 1½ கிலோ கஞ்சாவுடன் 5 வாலிபர்கள் கைது

    குமரி மாவட்டத்தில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த 5 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கஞ்சா கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் கஞ்சா கும்பலை தீவிரமாக கண்காணித்து வந்தனர். களியக்காவிளை பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    இதேப்போல் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் பைங்குளம் சந்திப்பு பகுதியில் வரும்போது அங்கு 4 வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர்.

    போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் பத்மநாபபுரத்தை சேர்ந்த அஜித் (23), அஜிமல் (19), நிசாந்த் (21), ராமபிரகாஷ் (19) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா வைத்திருந்த 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் கஞ்சா யாரிடம் வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் குன்றுவிளை சந்திப்பில் வரும்போது அங்கு வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்தார்.

    போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த பையில் 1¼ கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×