என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிவலப்பாதையில் மழைநீர் தேங்கி கிடக்கும் காட்சி.
    X
    கிரிவலப்பாதையில் மழைநீர் தேங்கி கிடக்கும் காட்சி.

    வருண யாகம் முடிந்ததும் திருவண்ணாமலையில் கொட்டித்தீர்த்த மழை

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருண யாகம் முடிந்ததும் 2½ மணி நேரம் பெய்த பலத்த மழையால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். #VarunaYagam
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை பிரம்ம தீர்த்த குளத்தில் மார்பளவு தண்ணீரில் இறங்கி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க வருண யாகம் செய்தனர். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    மேலும் இசை கலைஞர்களால் நாதஸ்வரம், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம் உள்ளிட்ட இசை கருவிகளால் மழை வேண்டி இசை ராகங்கள் இசைக்கப்பட்டன.

    அதைத் தொடர்ந்து யாக கலசங்களை சிவாச்சாரியார்கள் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் இருந்து சுமந்து வந்து பிரம்ம தீர்த்தத்தில் பூஜைகள் செய்து கலசநீர் பிரம்ம தீர்த்தத்தில் தெளிக்கப்பட்டன.

    திருவண்ணாமலையில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் மழை வலுத்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் ½ மணி நேரம் மழை பெய்தது. சிறிது நேரம் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    இரவு 9.30 மணி வரை மழை நீடித்தது. இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் வளாகம் முழுவதும் மழை தண்ணீர் தேங்கியது.

    கிரிவலப்பாதையில் பல இடங்களில் மழை நீர் குட்டை போல் தேங்கியுள்ளது. திருவண்ணாமலையில் பெய்த மழையின் காரணமாக பக்தர்கள் பரவசமடைந்தனர்.

    இதேபோல மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.



    சேத்துப்பட்டு, தேவிகாபுரம், தேசூர், சி.ம.புதூர் குண்ணகம்பூண்டி, வெடால் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேத்துப்பட்டு அருகே நெடுங்குணம் கிராமம் பூமாசெட்டிக்குளம் பகுதி செட்டிக்குளம் சாலையில் திடீரென மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சேத்துபட்டு தாசில்தார் சுதாகர் மற்றும் ஊழியர்கள் அங்கு சென்று மரக்கிளையை வெட்டி அகற்றினர்.

    தேவிகாபுரம் ஒட்டன் குடிசை பகுதியில் 3 குடிசை வீடு பகுதியின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. தகவல் அறிந்ததும் அங்கு சென்று 3 குடும்பத்தை சேர்ந்த 9 பேரை மீட்டு தேவிகாபுரம் அரசு ஆண்கள் பள்ளியில் தங்க வைத்தார். அங்கு அவர்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

    கீழ்பென்னாத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை 5.45 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு 8 மணி வரை நீடித்தது. இதனால் குண்டும் குழியுமான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் இரவில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருவண்ணாமலை-40.1

    கீழ்பென்னாத்தூர்-46.8

    சேத்துப்பட்டு-15.4

    போளூர்-5.8

    வந்தவாசி-17.4

    சாத்தனூர் அணை-2. #VarunaYagam

    Next Story
    ×