search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் பிரபல ரவுடி ஓட, ஓட விரட்டி படுகொலை
    X

    திண்டுக்கல்லில் பிரபல ரவுடி ஓட, ஓட விரட்டி படுகொலை

    திண்டுக்கல்லில் பிரபல ரவுடி ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ரவுண்டு ரோடு பகுதியைச் சேர்ந்த பாலு மகன் கார்த்திக் (வயது 35). இவருக்கு சந்திரா என்ற மனைவியும், கவுசல்யா (7) என்ற மகளும் உள்ளனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வெள்ளைப்பூண்டு, மாதுளம்பழம் போன்றவை வாங்கி வாகனத்தில் வைத்து வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவு தனது வீட்டில் சாப்பிட்டு விட்டு அனுமந்தன்நகரில் போடப்பட்டுள்ள புதிய பாலத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது 10-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் இவரை பயங்கர ஆயுதங்களுடன் விரட்டி வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திக் உயிருக்கு பயந்து பாலத்தின் மீது ஓடினார். ஆனால் 2 புறமும் சுற்றி வளைத்த அந்த கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அரிவாள் மற்றும் பட்டா கத்தி போன்ற ஆயுதங்களுடன் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தனர்.

    15-க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு வெட்டு விழுந்தது. இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஏ.டி.எஸ்.பி. சுகாசினி தலைமையில் நகர் வடக்கு போலீசார் விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட கார்த்திக்கின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் விட்டுச் சென்ற 2 ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், கார்த்திக் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேவல் சண்டை நடத்திய தகராறில் கார்த்திக் ஒரு சிலரை அரிவாளால் வெட்ட முயன்றார். இதனால் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இவரது அண்ணன் செல்வம் என்பவரும் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கார்த்திக் முக்கிய சாட்சியாக உள்ளார்.

    தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் மனைவி மற்றும் குழந்தையுடன் கோபால்பட்டியில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ரவுண்டு ரோட்டுக்கு குடி வந்துள்ளார்.

    ஏற்கனவே இவர் மீது முன் விரோதத்தில் இருந்த நபர்கள்தான் கார்த்திக்கை வெட்டி படுகொலை செய்திருக்க வேண்டும் என சந்தேகப்படுகிறோம். விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்று தெரிவித்தனர்.
    Next Story
    ×