search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
    X

    திருப்பூரில் போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

    திருப்பூரில் போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற 2 வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்பூர்:

    பல்லடத்தை சேர்ந்தவர் மாகாளியப்பன். இவருடைய மனைவி சரசு (வயது 60). இவர் திருமுருகன்பூண்டியை அடுத்த பள்ளிபாளையத்தில் உள்ள அவருடைய மகன் கணேசன் வீட்டிற்கு செல்வதற்காக திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து திருமுருகன்பூண்டிக்கு பஸ்சில் சென்றார்.

    பின்னர் பஸ்சை விட்டு இறங்கி வீட்டிற்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருநீலகண்டர் வீதி அருகே சென்ற போது 2 பேர் சரசுவிடம் சென்று தாங்கள் இருவரும் போலீசார் என்று அறிமுகப்படுத்தி உள்ளனர்.

    பின்னர் அவர்கள் சரசுவிடம் சிறிது நேரத்திற்கு முன்பு இதே பகுதியில் பெண்களிடம் நகையை பறித்து சென்று விட்டனர். எனவே நீங்கள் உங்கள் கழுத்தில் கிடக்கும் தங்க நகையை கழற்றி பையில் வைத்து கொள்ளுங்கள் என்று கூறி உள்ளனர்.

    ஆனால் சரசு அவர்களிடம் எனது வீடு அருகில்தான் உள்ளது. எனவே நகையை கழற்ற மாட்டேன் என்று கூறி உள்ளார். அதற்கு அந்த மர்ம நபர்கள் தூரத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் நின்று கொண்டிருக்கின்றனர். நீங்கள் நகையை அணிந்து சென்றால் அவர்கள் எங்களை திட்டுவார்கள் என்றும், எனவே நீங்கள் கழட்டி பையில் வைத்து சென்றால்தான் பாதுகாப்பு என்று கூறி அவரை கட்டாயப்படுத்தி உள்ளனர்.

    இதையடுத்து அவர்களை நம்பிய சரசு தான் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் நகையை கழற்றிய போது மர்ம நபர்களில் ஒருவர் சரசுவிடம் நகையை வாங்கி தான் வைத்திருந்த சிறிய பாலித்தீன்பையில் சுற்றி சரசு வைத்திருந்த துணி பையில் வைப்பது போல் நடித்துள்ளார்.

    பின்னர் சரசுவிடம் வீட்டிற்கு பத்திரமாக செல்லுங்கள் என்றும் கூறி உள்ளனர். அங்கிருந்து வீட்டிற்கு சென்ற சரசு நகை வைத்த பையை எடுத்து பார்த்துள்ளார். ஆனால் பையில் நகை இல்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பதறி அடித்து கொண்டு மர்ம நபர்கள் நின்ற இடத்திற்கு சென்று பார்த்தார். ஆனால் அவர்கள் இருவரும் அந்த இடத்தில் இல்லை. அப்போதுதான் அவர்கள் இருவரும் போலீஸ் என்று கூறி 5 பவுன் தங்க நகையை நூதன முறையில் பறித்து சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து சரசு திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
    Next Story
    ×