search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வலங்கைமான் அருகே வீட்டின் கதவை உடைத்து தாய், மகளிடம் சங்கிலியை பறித்த 4 பேர் கைது
    X

    வலங்கைமான் அருகே வீட்டின் கதவை உடைத்து தாய், மகளிடம் சங்கிலியை பறித்த 4 பேர் கைது

    வலங்கைமான் அருகே வீட்டின் கதவை உடைத்து தாய்-மகளிடம் சங்கிலியை பறித்து சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 15¼ பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
    வலங்கைமான்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள கண்டியூரை சேர்ந்தவர் வைத்தியநாதன். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். கடந்த 5-ந்தேதி நள்ளிரவில் 4 மர்மநபர்கள், இவருடைய வீட்டின் பின்புறமாக தாழ்பாள் மற்றும் கதவுகளை நூதன முறையில் திறந்து உள்ளே நுழைந்தனர். அப்போது தூங்கி கொண்டிருந்த வைத்தியநாதனின் மனைவி அனுசுயா, மகள் கர்ப்பிணியான சிந்துஜா ஆகியோரின் கழுத்தில் கிடந்த 15¼ பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மர்மநபர்கள் மோட்டார் சைக்கிள்களில் தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து வைத்தியநாதன் வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவத்தன்று அப்பகுதிகளில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் நாச்சியார்கோவில் கடைத்தெருவில் உள்ள கேமராவில் 4 பேர் மோட்டார் சைக்கிள்களில் செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து 4 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வலங்கைமான் மகாமாரியம்மன் கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், மன்னார்குடி தாலுகா பெருகவாழ்ந்தான் சித்தமல்லி மல்லிகை தெருவை சேர்ந்த துரைசாமி மகன் கார்த்திக் (வயது 19), அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் ஆனந்தராஜ் (வயது 19), தஞ்சை மாவட்டம் பந்தல்லூர் செருகுடி மேலத்தெருவை சேர்ந்த செல்வகுமார் மகன் ரஞ்சித் (18), அதே பகுதியை சேர்ந்த ராயமுத்து மகன் விஜயகுமார் (32) என்பதும், வைத்தியநாதனின் வீட்டில் அவருடைய மனைவி மற்றும் மகளிடம் சங்கிலியை பறித்து சென்றதும் தெரியவந்தது. 

    இது குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், ஆனந்தராஜ், ரஞ்சித், விஜயகுமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை, வலங்கைமான் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 15¼ பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×