search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திருநாவுக்கரசிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீஸ் அதிரடி விசாரணை
    X

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திருநாவுக்கரசிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீஸ் அதிரடி விசாரணை

    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசிடம் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். #pollachiissue

    கோவை:

    தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரி ராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதிஷ், வசந்த்குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதில் திருநாவுக்கரசிடம் 4 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது. நேற்று முன்தினம் இரவு முதல் அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்று 3-வது நாளாக திருநாவுக்கரசிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. வட்டித் தொழில் செய்து வந்த திருநாவுக்கரசுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலருடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. வலையில் விழுந்த பெண்களை திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் சீரழித்து, வீடியோ எடுத்த விவகாரம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வெளிவந்துள்ளது.

    அப்போது போலீசாரும் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஆனால் அரசியல் பிரமுகர்கள் உதவியால், விசாரணை வளையத்துக்குள் சிக்காமல் இந்த கும்பல் தப்பி வந்துள்ளது. இதற்கு கைமாறாக பல லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்துள்ளனர். எனினும் கடந்த மாதம் இவர்களால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி தைரியமாக போலீசில் புகார் கொடுத்ததும், திருநாவுக்கரசு தவிர அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது திருநாவுக்கரசை வெளி மாநிலத்துக்கு தப்பி செல்லுமாறும் போலீஸ் அதிகாரி ஒருவர் தான் கூறி உள்ளார். ஆனாலும், வழக்கு விஸ்வரூபம் எடுத்ததும் தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று திருநாவுக்கரசை கைது செய்தனர்.

    திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்-யார்? என்ற விவரங்கள் வெளியாகி உள்ளதால் அவர்களிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த 7 ஆண்டுகளாக இந்த கும்பல் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளது. சில பெண்களை அடித்து, துன்புறுத்தி பணம், நகை பறித்துள்ளனர். இச்சம் பவங்களில் 20 பேர் வரை தொடர்பு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இந்த கும்பலுடன் தொடர்பில் இருந்த அரசியல் பிரமுகர்கள் யார்-யார்? என விசாரணை நடத்தினர். இதில் சில முக்கியத்தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்பேரில் மேலும் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    தங்களது வலையில் விழுந்த பெண்கள், மாணவிகளை இந்த கும்பல் ஆனைமலையில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் வைத்து ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீட்டிலும், பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தி லேப்டாப், பென்-டிரைவ், செல்போன்கள் மற்றும் ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்திருந்தனர். அவற்றை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பலால் சீரழிக்கப்பட்ட பெண்கள் தொடர்புடைய சில வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோக்களில் உள்ள சில அடையாளங்கள், அவை திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் எடுக்கப்பட்டிருப்பதை உறுதிபடுத்துகிறது. இது தொடர்பாக அவரது பண்ணை வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று 3-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    திருநாவுக்கரசுக்கு நேற்று திடீரென காலில் வீக்கம் அடைந்து, கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இரவு 7.30 மணிக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    பின்னர் மீண்டும் அவரை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  #pollachiissue 

    Next Story
    ×