என் மலர்
செய்திகள்

அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே படுகொலை- ரவுடியை பழிக்கு பழியாக தீர்த்துகட்டினர்
அம்பத்தூர்:
ஓட்டேரியை சேர்ந்தவர் சத்யா என்கிற செங்குட்டுவன் (வயது 37) ரவுடி. நேற்று இரவு அவர் அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல் சத்யாவை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சத்யா உரிழந்தார்.
இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பழிக்குப் பழியாக சத்யா படுகொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடி சின்னாவின் கூட்டாளியான ராதா படுகொலை செய்யப்பட்டார். இதில் சத்யா குற்றவாளி ஆவார்.
இந்த நிலையில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஜெயிலில் இருந்த சத்யா ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் அவர் வேப்பம்பட்டில் உள்ள 2-வது மனைவி வீட்டில் தங்கி இருந்தார்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் சத்யாவை திட்டமிட்டு தீர்த்துகட்டி விட்டனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






