search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து 385 கனஅடியாக அதிகரிப்பு
    X

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து 385 கனஅடியாக அதிகரிப்பு

    கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்காக திறந்து விடப்பட்ட 385 கன அடி தண்ணீர் இன்று காலை நிலவரப்படி ஊத்துக்கோட்டை தாமரை குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்து கொண்டு இருக்கிறது. #PoondiLake
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் பூண்டி ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. பருவ மழை பொய்த்ததால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் அடியோடு குறைந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு கடந்த 7-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட்டது. வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் 10-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்து சேர்ந்தது.

    இதைத் தொடர்ந்து 11-ந் தேதி இரவு பூண்டி ஏரிக்கு தண்ணீர் சென்றடைந்தது. முதலில் வினாடிக்கு 10 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. பின்னர் இது படிப்படியாக அதிகரித்தது.

    இன்று காலை நிலவரப்படி ஊத்துக்கோட்டை தாமரை குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு 385 கனஅடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி.. இதில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது ஏரியில் நீர் மட்டம் 20.21 அடியாக பதிவானது. 209 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 20 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    கடந்த 11-ந் தேதி பூண்டி ஏரியின் நீர் மட்டம் 18.81 அடியாக இருந்தது. 152 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது. கிருஷ்ணா நதி கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் 5 நாட்களில் ஏரியின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்துள்ளது.

    கண்டலேறு அணையில் தற்போது 11 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் 8 டிஎம்சி இருப்பில் வைத்து கொண்டு மீதி தண்ணீரை திறந்துவிட உத்தேசித்து இருப்பதாக ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #PoondiLake
    Next Story
    ×