search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - சித்தராமையா
    X

    காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - சித்தராமையா

    காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சித்தராமையா அறிவித்து உள்ளார். #Siddaramaiah

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தொடர்ந்து சதி செய்து வருவதாக 2 கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டி இருந்தனர்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரை விலைக்கு வாங்க பா.ஜனதா திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்காக மிக உயர்ந்த பரிசை அவர்களுக்கு தர பா.ஜனதா காத்திருப்பதாகவும் முதல் மந்திரி குமாரசாமி, கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் கூறி இருந்தனர்.

    கடந்த முறை நடத்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் கள் கூட்டத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கி ஹோளி, எம்.எல்.ஏ.க்கள் உமேஷ் ஜாதவ், நாகேந்திரா, மகேஷ் கும்டஹள்ளி ஆகிய 4 பேர் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் மும்பையில் பா.ஜனதா கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இவர்களிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் சார்பில் 2 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. இதனால் அவர்களை தமிழக அரசியல் பாணியில் தகுதிநீக்கம் செய்ய காங்கிரசார் முடிவு செய்து உள்ளனர்.


    காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு 4 பேரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க அவர்கள் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போது கர்நாடக சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தை காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் மட்டுமல்ல பி.சி.பாட்டில், நாராயணகவுடா உள்ளிட்ட மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.

    நேற்று நடந்த சட்டசபை கூட்டத்திற்கும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் வரவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் விதான் சவுதா வளாகத்தில் இன்று நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சித்தராமையா அறிவித்து உள்ளார். இதன்படி அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் இன்று நடைபெறும் கூட்டத்தையும் புறக்கணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்படி கூட்டத்தை புறக்கணித்தால் அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர்களின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. உமேஷ் ஜாதவ் உணவு கிடங்கு வாரிய தலைவராக பதவி வகித்து வந்தார். அவரது வாரிய தலைவர் பதவியை முதல் மந்திரி குமாரசாமி பறித்து உள்ளார். புதிய வாரிய தலைவராக பிரதாப் கவுடா பாட்டில் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    பெரும்பான்மை இல்லாத குமாரசாமி அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக நடந்த சட்டசபை கூட்டத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இன்று சட்டசபையில் பட்ஜெட்டை முதல் மந்திரி குமாரசாமி தாக்கல் செய்கிறார். அப்போதும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தர்ணாவில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தர்ணா நடத்தி ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக பா.ஜனதா மீது முதல் மந்திரி குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

    சட்டசபை நடவடிக்கைகளுக்கு குறுக்கீடு செய்யும் வகையில் பா.ஜனதா கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். சபை சுமூகமாக நடைபெற அவர்கள் ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் நினைத்தால் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வரலாம். நாங்கள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதாவின் தர்ணா போராட்டத்திற்கு சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணி அரசுக்கு பெரும்பாண்மை இல்லை என்று பா.ஜனதா கூறி வருகிறது. அப்படி கூறும் அவர்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கொண்டுவர வேண்டியது தானே. அவர்களை கொண்டு வராமல் தடுப்பது யார்?

    இவ்வாறு அவர் கூறினார். #Siddaramaiah

    Next Story
    ×