search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருமகளின் கள்ளத்தொடர்பை கண்டித்த விவசாயி படுகொலை
    X

    மருமகளின் கள்ளத்தொடர்பை கண்டித்த விவசாயி படுகொலை

    கடம்பூர் அருகே மருமகளின் கள்ளத்தொடர்பை கண்டித்த விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கட்டிட தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள மேலபாறைப்பட்டி கீழ தெருவைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை (வயது 60) விவசாயி. இவருடைய மனைவி ஆனந்தம் அம்மாள். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் அரிகிருஷ்ணன். அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    நேற்று இரவு 9 மணி அளவில் அண்ணாத்துரை தனது வீட்டில் கட்டிலில் படுத்து கிடந்தார். மனைவி ஆனந்தம் அம்மாள், அருகில் உள்ள மாட்டு தொழுவத்துக்கு சென்றிருந்தார். அப்போது அண்ணாத்துரையின் வீட்டுக்குள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்மநபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டினர்.

    இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இதுகுறித்து கடம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட அண்ணாத்துரையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில் பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கொலையாளிகளை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    அண்ணாத்துரையின் மகன் அரிகிருஷ்ணனுக்கும், நெல்லையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் ஆனது. திருமணத்திற்கு பின் அரிகிருஷ்ணன் மனைவியை ஊரில் விட்டு விட்டு அமெரிக்கா சென்றுவிட்டார். இதனால் அரிகிருஷ்ணனின் மனைவி அண்ணாத்துரை வீட்டில் வசித்து வந்தார்.

    அப்போது அவருக்கும் கடம்பூர் அருகே உள்ள மும்மலைபட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முத்து மாரியப்பன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையறிந்ததும் அண்ணாத்துரை கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. மேலும் ஊருக்கு வந்திருந்த அரிகிருஷ்ணன் இந்த விவகாரத்தை அறிந்து மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதையடுத்து அரிகிருஷ்ணனின் மனைவி அவரை பிரிந்து நெல்லையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து விட்டார். அரிகிருஷ்ணனும் மீண்டும் அமெரிக்காவுக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் அரிகிருஷ்ணன் தனது மனைவியை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த அவரது கள்ளக்காதலன் முத்து மாரியப்பன் தொடர்ந்து அண்ணாத்துரையிடம் தகராறு செய்து வந்தார்.

    இதுபற்றி அண்ணாத்துரை தரப்பில் கடம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் முத்து மாரியப்பன் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து அண்ணாத்துரையை கொலை செய்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் தொடக்கத்திலேயே முத்து மாரியப்பன் மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இதனிடையே முத்து மாரியப்பனை இன்று போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் அண்ணாத்துரை கொலை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையில் ஈடுபட்ட மேலும் 2 நபர்கள் யார்? என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×