search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் 5-வது நாளாக வேலைநிறுத்தம் - மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது
    X

    கோவையில் 5-வது நாளாக வேலைநிறுத்தம் - மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது

    ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி 5-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். #JactoGeo
    கோவை:

    9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ -ஜியோ சார்பில் 22-ந்தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டம் நடந்து வருகிறது.

    கோவை மாவட்டத்தில் இன்று 5-வது நாளாக கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ சார்பில் கோரிக்கைகளை விளக்கி மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் திரளான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து மறியலில் ஈடுட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்துக்கு ஆதரவாக காவல்துறை அரசு பணியாளர்கள், நீதித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் உள்பட பலரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

    வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடம் காலியிடங்களாக அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.

    எனினும் பல இடங்களில் ஆசிரியர்கள் இன்றும் பணிக்கு செல்லவில்லை. இதைத்தொடர்ந்து பணிக்கு வராத ஆசிரியர்களின் விவரம் குறித்து பள்ளி வாரியாக கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொடுக்கவும் ஏராளமான பட்டதாரிகள் இன்று காலை முதலே கோவையில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் திரண்ட வண்ணம் இருந்தனர்.

    கடந்த 2 நாட்களில் மட்டும் 2,680 தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்துள்ளனர். தகுதிஅடிப்படையில் தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 4 நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போட்டத்தில் ஈடுபட்டனர். மறியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் போராட்டத்தை கைவிடுமாறும் கூறினர். கைவிட மறுத்தவர்களை கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்தநிலையில் இன்று 5 -வது நாளாக கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இதே போல நீலகிரி மாவட்டத்திலும் இன்று 5-வது நாளாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். #JactoGeo
    Next Story
    ×