search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லித்தோப்பில் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் கொள்ளை
    X

    நெல்லித்தோப்பில் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணம் கொள்ளை

    நெல்லித்தோப்பில் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    நெல்லித்தோப்பு வேல் முருகன் நகர் 2-வது குறுக்கு தெருவில் சாலை முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் தினமும் தரிசனம் செய்து உண்டியல் காணிக்கை பணம் செலுத்துவது வழக்கம்.

    நேற்று சங்கடகர சதுர்த்தியையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    சாமி தரிசனத்துக்கு பின்னர் கோவில் அர்ச்சகர் ராஜி இரவு 10 மணிக்கு கோவிலை பூட்டி சென்றார். இன்று காலை 6 மணிக்கு வழக்கம் போல் பூஜை செய்ய அர்ச்சகர் ராஜி கோவிலுக்கு வந்தார்.

    அப்போது கோவிலின் 2 கதவு பூட்டுகளும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. காணிக்கை பணம் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

    நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து உண்டியல் காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    கடந்த 6 மாதமாக உண்டியல் திறக்கப்படவில்லை. எனவே, உண்டியலில் சுமார் ரூ.60 ஆயிரம் வரை காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறனும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் அருகில் உள்ள வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து உண்டியல் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×