search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் மருத்துவமனைகள் ஏழை-எளியவர்களுக்கும் உயர்சிகிச்சை அளிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
    X

    தனியார் மருத்துவமனைகள் ஏழை-எளியவர்களுக்கும் உயர்சிகிச்சை அளிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

    தனியார் மருத்துவமனைகள் ஏழை-எளியவர்களுக்கும் உயர்சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #EdappadiPalaniswami
    சென்னை:

    அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையத்தை துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு இன்று தொடங்கி வைத்தார். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவது மட்டுமல்லாமல், மிகச் சிறந்த மனிதவளம் மற்றும் கட்டமைப்பை ஏற்படுத்துவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக சிறந்து விளங்கி வருகிறது.

    தாய்சேய் நலம் மற்றும் குடும்ப நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும், நோய்களைத் தடுப்பதற்காகவும் பல முன்னோடித் திட்டங்களை அரசு திறம்பட செயல்படுத்தி வருகிறது.

    உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்துதல், மருத்துவ மனித வளத்தை பெருக்குதல் போன்றவைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

    இதன் காரணமாக இந்தியாவில் உயரிய மருத்துவ சேவை பெற வசதியுள்ள இடமாக தமிழ்நாடு கருதப்படுகிறது.

    வளர்ந்த நாடுகள் அடைந்துள்ள சுகாதார குறியீடுகளை, 2023-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்ற இலக்கு அம்மாவால் வெளியிடப்பட்ட “தொலைநோக்கு திட்டம் 2023”ல் சேர்க்கப்பட்டுள்ளது.

    தாய்மார்கள் இறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதம் போன்ற சுகாதார குறியீடுகளில் ஐக்கிய நாடுகளின் மில்லினியம் வளர்ச்சி இலக்குகளை ஏற்கனவே அடைந்த நிலையில், மற்ற மாநிலங்களுக்கு முன்னதாகவே தேசிய இலக்குகளையும் தமிழ்நாடு அடைந்துள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் காப்பீட்டுத் திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 27.73 லட்சம் பயனாளிகள் 5,426.74 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நமது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    சமீபத்தில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டு கைகளையும் இழந்த ஒருவருக்கு, கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பது ஒரு சாதனையாகும்.



    புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு அரசு, அரசு மருத்துவமனைகளை வலுப்படுத்தி வருகிறது. புற்றுநோய் உட்பட தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

    மதுரை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 60 கோடி ரூபாய் செலவில் 4 மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஏழை மக்களுக்கு தரமான, உயரிய சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படுகின்றது.

    இந்தியாவில் பிற மாநிலங்களில் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலிருந்தும் நோயாளிகள் தமிழ்நாட்டிற்கு சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர். இதனால், தமிழ்நாடு மருத்துவ சுற்றுலாவின் தலைமையிடமாக விளங்குவது மட்டுமன்றி, நமது நாட்டிற்கு அந்நிய செலாவணியையும் ஈட்டித்தருகிறது.

    ஏழை எளிய மக்களுக்கு உயரிய சிகிச்சைகள் தேவைப்பட்டு, அவர்கள் தனியார் மருத்துவமனைகளை அணுக வேண்டிய சூழ்நிலையில், அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதை இத்தருணத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

    அப்பல்லோ மருத்துவமனையின் பணி தொடர எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அப்பல்லோ மருத்துவமனை குழு தலைவர் பிரதாப் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். #EdappadiPalaniswami

    Next Story
    ×