search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க. வழக்கு - சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல்
    X

    10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க. வழக்கு - சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல்

    பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. #DMK #MKStalin #ChennaiHighCourt
    சென்னை:

    தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:-

    பல நூற்றாண்டுகளாக சமுதாய ரீதியாக கொடுமைகளை அனுபவித்து வந்தவர்களை சமுதாய மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக இடஒதுக்கீடு முறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த இடஒதுக்கீடு முறை, மத்திய அரசு கொண்டு வருவதற்கு முன்பே, தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுவிட்டது.

    பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்றும் 1921-ம் ஆண்டில் முதல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. முற்படுத்தப்பட்ட வகுப்பினரை சேராதவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கி 1922-ம் ஆண்டு மற்றொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதுபோல பல அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

    இதில், கல்விக்கான இட ஒதுக்கீடு தொடர்பான அரசாணையை எதிர்த்து செம்பகம் துரைராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அந்த அரசாணையை ரத்து செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் செய்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதனால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் 1951-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்மூலம், சாதி ரீதியான இடஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட்டு அமல்படுத்தப்பட்டது. பிற மாநிலங்களில் எல்லாம் 50 சதவீதம் இடஒதுக்கீடு மட்டுமே வழங்க முடியும். ஆனால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில், 9 அட்டவணையில் திருத்தம் கொண்டுவந்து, தமிழகத்தில் மட்டும் 69 சதவீத இடஒதுக்கீடு முறை நடை முறையில் உள்ளது.

    இந்த நிலையில், கல்வி, வேலை வாய்ப்புகளில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசியல் அமைப்புச் சட்டத்தில் 103-வது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவுகளை சேராத பொதுப்பிரிவினர்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இந்த 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சாதி ரீதியான இடஒதுக்கீடு மட்டுமே வழங்க முடியுமே தவிர, பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினால், அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தையே மீறுவதாகும்.

    அதுவும், இந்த சட்டத்திருத்தம் அவசர கதியில் கொண்டுவரப்பட்டு உள்ளது. மத்திய மந்திரி சபை ஜனவரி 7-ந் தேதி கூடி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கிறது. மறுநாள் ஜனவரி 8-ந் தேதி நாடாளுமன்ற மக்களவையிலும், அதற்கு அடுத்தநாள் ஜனவரி 9-ந் தேதி மாநிலங்களவையிலும் இம்மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    இந்த சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு முன்பு எந்த ஒரு ஆய்வையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினர் யார்? என்பது இந்த சட்டத் திருத்தத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானத்தை பெறுபவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்று அதில் கூறப்பட்டு உள்ளது. இந்தியாவில் 97 சதவீதத்தினர் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானத்தை கொண்டிருப்பவர்கள். அப்படி பார்க்கப்போனால், இந்த இடஒதுக்கீடு யாருக்காக கொண்டுவரப்பட்டுள்ளது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

    50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு வழங்கி உள்ளதை தெரிந்து இருந்தும், கூடுதலாக 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கி உள்ளது. எனவே, இந்த புதிய சட்டத் திருத்தத்துக்கு தடைவிதிக்க வேண்டும். இந்த சட்டத்திருத்தத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #DMK #MKStalin #ChennaiHighCourt
    Next Story
    ×