search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை சிறையில் ஆயுள் தண்டனை கைதியை கொலை செய்தது அம்பலம்
    X

    கோவை சிறையில் ஆயுள் தண்டனை கைதியை கொலை செய்தது அம்பலம்

    கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது.
    கோவை:

    திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 56). கொலை வழக்கு ஒன்றில் கைதான இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் அதிகாலை ராமசாமிக்கு மாரடைப்பு ஏற்பட் டதாக கூறி அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் இயற்கை மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், ராமசாமியின் உடல் பிரேத பரிசோதனையின் போது பின்தலை உள்பட சில இடங்களில் காயம் இருந்தது தெரிய வந்தது. இதையறிந்த போலீசார் சிறைக்கு சென்று ராமசாமியுடன் தங்கி இருந்த சக கைதிகளான ரமேஷ்(30), சுப்பிரமணி(32) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது சிறையில் சக கைதி ரமேஷ் என்பவருக்கும் ராமசாமிக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது தெரிய வந்தது. ரமேஷ் மீது ஏற்கனவே சிறை ஊழியரை தாக்கியதாக புகார் உள்ளது. எனவே முன்விரோதம் காரணமாக ராமசாமியை ரமேஷ் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, கைதி மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அறிக்கை கிடைத்ததும் அதை வைத்து மாஜிஸ்திரேட்டு விசாரணை அறிக்கை தருவார். அந்த அறிக்கையில் அடிப்படையில் தான் இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்படுமா? என்பதை கூற முடியும் என்றனர்.
    Next Story
    ×