search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடும் பனிப்பொழிவால் இரவில் நடமாட்டம் குறைவு: சளி-காய்ச்சலால் பொதுமக்கள் அவதி
    X

    கடும் பனிப்பொழிவால் இரவில் நடமாட்டம் குறைவு: சளி-காய்ச்சலால் பொதுமக்கள் அவதி

    கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவால் இரவில் நடமாட்டம் குறைந்துள்ளது. சளி மற்றும் காய்ச்சலால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    தருமபுரி:

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாகவே கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. மேலும் நாள் முழுவதும் பகலில் குளிர் காற்று வீசுகிறது. இதன் காரணமாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

    கடந்த ஒரு வாரமாகவே மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை கடும் குளிர் மற்றும் மூடுபனி காணப்படுகிறது. இந்த கடும் குளிரால் பொதுமக்களுக்கு காய்ச்சல் இருமல், சளி, சரும நோய் போன்றவை அதிகரித்துள்ளது. இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    ஓசூர் அரசு மருத்து வமனைக்கு நாள்தோறும் 1200 முதல் 1500 புற நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதேபோன்று தனியார் மருத்துவமனைகளிலும், குளிர்க்கால நோயால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    கடந்த ஒரு வார காலமாக ஓசூரில் குறைந்தபட்ச சீதோஷ்ணமாக ஞாயிற்றுக் கிழமை 11 டிகிரி செல்சியஸ் பதிவாகின. குறிப்பாக ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை மக்களின் நடமாட்டம் குறைவாக உள்ளது. குறிப்பாக நகரத்தைக் காட்டிலும், கிராமத்தில் மக்கள் நடமாட்டம் இரவு நேரங்களில் குறைவாக உள்ளது. இந்தக் குளிர் மேலும் ஒரு வாரம் தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.

    தொப்பூர் - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை கடும் பனி கொட்டுகிறது. குறிப்பாக தொப்பூர் மலைப்பாதையில் மூடு பனி அதிகமாக உள்ளது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றன.

    மூடு பனியால் தொப்பூர் - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் வாகனங்கள் மோதிக் கொள்ளும் நிகழ்வுகள் நடந்துவருகின்றன. நேற்று அதிகாலை தருமபுரி குமாரசாமிப்பேட்டையை அடுத்த பென்னாகரம் மேம்பாலம் அருகே லாரியின் பின்னால் கேரளாவில் இருந்து மாணவர்கள் வந்த சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது. மூடு பனி காரணமாக இப்படி விபத்துக்கள் நடப்பது அதிகமாகி விட்டது.
    Next Story
    ×