search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து - தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து
    X

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து - தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை விரிவாக பார்க்கலாம். #TiruvarurByElection
    சென்னை:

    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெற இருந்த நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கஜா புயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூரில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்தது.

    இந்த அறிவிப்பு குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கூறியதாவது:

    திருவாரூர் தேர்தலை இன்முகத்துடன் வரவேற்க தயாராக இருந்த நிலையில் ரத்தாகி விட்டது. தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏமாற்றமளிக்கிறது என்று தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

    மாவட்ட தேர்தல் அதிகாரி நடத்திய கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளும் தேர்தலை எதிர்த்தன. கஜா புயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூரில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. பாஜக உள்நோக்கத்துடன் இடைத்தேர்தலை அணுகியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறினார்.

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை ரத்து செய்தது சரியான நடவடிக்கையே. எனது கணிப்பின் அடிப்படையில் திருவாரூர் தேர்தல் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்றேன். புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்போது தேவை நிவாரணம்தான் தேர்தல் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறினார்.

    முதல்வரை பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சந்தித்தபோதே தேர்தல் ரத்து முடிவாகிவிட்டது. திருவாரூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என்று  காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.

    இதேபோல் திருவாரூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பை விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    தேர்தல் ரத்து அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக திருவாரூர் தொகுதியில் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எஸ். காமராஜ்  கூறினார். இடைத்தேர்தல் திட்டமிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

    அதிமுக, பாஜக நடவடிக்கைகளை வைத்தே தேர்தல் ரத்தாகும் என முன்கூட்டியே கணிக்க முடிந்ததாக தி.மு.க. வேட்பாளரான பூண்டி கலைவாணன் கருத்து தெரிவித்துள்ளார்.

    மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டு தேர்தலை ரத்து செய்துள்ளன என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாகுல் அமீது கூறினார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    மேலும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  #TiruvarurByElection 
    Next Story
    ×