என் மலர்
செய்திகள்

கவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது: ஜி.கே.வாசன்
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆற்றிய உரை எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அமையவில்லை என்பது தான் உண்மை நிலை. தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயலின் தாக்குதலுக்கு நிவாரணத் தொகையை முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதற்கான அறிவிப்பு இல்லை.
சரக்கு மற்றும் சேவை வரியில் முக்கியமான பல்வேறு பொருட்களுக்கு மேலும் வரி விகிதத்தை குறைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதற்கான அறிவிப்பும் இல்லை. அண்டை மாநிலத்தில் இருந்து பெறக் கூடிய நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட எடுக்க வேண்டிய தீவிர நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பும் இல்லை.
மிக முக்கியமாக கஜா புயல் தாக்கிய மாவட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் நம்பிக்கை கொடுக்கக்கூடிய வகையில் மின்கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும், விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை.
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதற்கு என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பும் இல்லை.
குறிப்பாக மது விலக்கு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அமலுக்கு வந்து விடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழகத்தில் நிலவும் வறுமையை ஒழிப்பதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதற்கான எந்த அறிவிப்பும் இல்லை. மேலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் போன்ற பலதரப்பட்டவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான உறுதியை கொடுக்கவில்லை.
மொத்தத்தில் தமிழகத்தில் நிலுவையில் இருக்கின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தித் தரக்கூடிய நடவடிக்கைகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இல்லாததால் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிய அறிவிப்பாகவே கவர்னரின் உரை அமைந்துள்ளது.
எனவே தமிழக கவர்னர் உரையில் இல்லாத பல்வேறு முக்கிய அம்சங்கள் தொடர்ந்து நடைபெற இருக்கின்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் வெளியிடப்பட்டு மக்கள் நலன் காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #GKVasan






