என் மலர்

  செய்திகள்

  பிளாஸ்டிக் தடைக்கு பொதுமக்கள் வரவேற்பு - பெரும்பாலான வியாபாரிகள் துணிப்பைக்கு மாறினர்
  X

  பிளாஸ்டிக் தடைக்கு பொதுமக்கள் வரவேற்பு - பெரும்பாலான வியாபாரிகள் துணிப்பைக்கு மாறினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் பெரும்பாலான வியாபாரிகள் நேற்று துணிப்பைகளுக்கு மாறினர். இந்த திட்டத்துக்கு பொதுமக்களும் வரவேற்பு அளித்துள்ளனர். #PlasticBan
  சென்னை:

  பிளாஸ்டிக்கால் ஆன தட்டு, தேநீர் குவளை, தண்ணீர் பாக்கெட், உறிஞ்சு குழல், கைப்பை உள்பட 14 வகையான பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. அந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

  மக்களது அன்றாட பயன்பாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் பெரிதும் கையாளப்பட்டு வருகின்றன. மக்களிடம் இருந்து பிளாஸ்டிக்கை பிரிக்கவே முடியாது என்ற சூழ்நிலையில், அரசின் இந்த தடை உத்தரவு நேற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

  சாலையோர உணவகங்கள் மற்றும் ஏராளமான ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாகவே இருந்து வந்தது. தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட நேற்று ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு பெரிதும் குறைக்கப்பட்டது. வாழை இலைகளிலேயே உணவு பரிமாறப்பட்டது.

  அதேபோல ‘பார்சல்’ கேட்டு வருவோரிடம் பாத்திரங்களை கொண்டுவருமாறு கடைக்காரர்கள் தெரிவித்தனர். இதனால் தூக்குச்சட்டி, கிண்ணம் போன்ற பாத்திரங்களை கொண்டுவந்து வேண்டிய உணவு வகைகளை வாடிக்கையாளர்கள் வாங்கி சென்றனர்.

  இட்லி-தோசை மாவு விற்பனை செய்பவர்களும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை கைவிட்டனர். வாடிக்கையாளர்களிடம் வீட்டில் இருந்து பாத்திரங்களை கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தனர். அந்தவகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று காலையில் பெண்மணிகள் பாத்திரங்களில் இட்லி-தோசை மாவு வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது. இதனால் பாத்திரங்கள் மீண்டும் மறு பிரவேசம் எடுத்திருக்கின்றன.

  இறைச்சி கடைகளிலும் தையல் இலைகள் எனும் மந்தார இலை, வாழை இலைகளிலேயே இறைச்சி தரப்பட்டது. எப்போதும் பயன்படுத்தப்படும் கருப்பு நிற பிளாஸ்டிக் கவர்களை இறைச்சி கடைகளில் நேற்று பார்க்க முடியவில்லை.  காய்கறி-பலசரக்கு போன்ற ‘பெரும்பாலான கடைகளில் ‘பிளாஸ்டிக் பை பயன்பாடு இல்லை’, ‘கடைக்கு செல்லும்போது கைப்பை எடுத்து செல்வோம்’ போன்ற வாசகங்கள் பெரிய அட்டைகளில் எழுதி வைக்கப்பட்டிருந்தது.

  கடைகளுக்கு வருவோர் மஞ்சப்பை, துணிப்பைகள் மற்றும் கூடைகளை எடுத்து வந்து காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கி சென்றனர். #PlasticBan

  வானகரம், திரு.வி.க.நகர் உள்பட நகரின் முக்கிய மீன் மார்க்கெட்களிலும் பிளாஸ்டிக் பை பயன்பாடு நேற்று பெருமளவு குறைந்திருந்தது. வாழை இலைகளிலேயே மீன்களை வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தனர். வாடிக்கையாளர்களும் தேவையான பாத்திரங்கள் மற்றும் துணிப்பைகளை கடைகளுக்கு எடுத்து வந்தனர். டீக்கடைகளிலும் பெரும்பாலும் கண்ணாடி டம்ளர்களே பயன்படுத்தப்பட்டன.

  மளிகை கடை முதல் அனைத்து கடைகளுக்கும் கைப்பையின் தேவை அதிகரித்து இருப்பதால் பெண்களின் அத்தியாவசிய பொருளாக துணிப்பைகள் மாறி வருகின்றன. ஆண்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள்களிலும் ஒரு துணிப்பை கட்டாயம் இடம்பிடிக்க தொடங்கி இருக்கிறது.

  கோவில்களில் அர்ச்சனை செய்வதற்கான பூஜை பொருட்களை மொத்தமாக பிளாஸ்டிக் பைகளில் கட்டி விற்கும் வியாபாரிகள் நேற்று பூஜைக்கு தேவையான பொருட்களை துணிப்பையில் வைத்தே விற்பனை செய்தனர். இந்த துணிப்பைகளுக்கு தனியாக ரூ.5 வசூலித்து கொண்டனர்.

  நகரத்து மக்களின் முக்கிய தேவையான துணிப்பைகளின் மவுசு ஒரே நாளில் இப்படி அதிகரிக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அந்தவகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை நேற்று மறக்க மக்கள் அதிகமாக முயற்சித்திருந்தனர்.

  ஆனாலும் சில இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை காண முடிந்தது. குறிப்பாக சாலையோரம் பூ வியாபாரம் மற்றும் பழ வியாபாரத்தில் ஈடுபடுவோர் நேற்று வழக்கம்போலவே பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினர். சிலர் பிளாஸ்டிக் பை மீதான தடை குறித்து கேள்வி எழுப்பும்போது, ‘கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற முடியும். வாங்கி வச்ச சரக்க என்ன பண்றது. கொஞ்ச நாளில் மாறிக்கலாம் சார்’, என்று சலிப்பாக பதில் அளித்தனர்.

  எது எப்படியோ பிளாஸ்டிக் மீதான தடையை மக்கள் ஏற்க தொடங்கி விட்டனர். இதுகுறித்து சென்னை மீர்சாகிப்பேட்டையை சேர்ந்த இல்லத்தரசிகள் வி.ஜெயந்தி, ஜெ.ஜோதி ஆகியோர் கூறுகையில், “பிளாஸ்டிக் பொருட்களை புறக்கணிப்பது தற்போது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் எதிர்காலத்தில் அது மிகப்பெரிய பலனை தரும். அரசின் இந்த திட்டம் நிச்சயம் வரவேற்கத்தக்கது”, என்றனர்.

  அதேபோல பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் அந்தந்த மண்டலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கிடங்குகளில் பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை ஒப்படைத்து வருகின்றனர். இக்கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்பட்டு கொடுங்கையூருக்கு எடுத்து செல்லப்படுகிறது.

  இதுகுறித்து மாநகராட்சி மண்டல அதிகாரி ஆ.பரந்தாமன் கூறுகையில், “பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மாநகராட்சி கடும் முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக சுழற்சி முறையில் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். 24 மணி நேரமும் செயல்படும் அறிவிக்கப்பட்ட கிடங்குகளில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கொடுக்கலாம்”, என்றார். #PlasticBan
  Next Story
  ×