search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயல் நிவாரணத்துக்கு கேட்டது ரூ.15 ஆயிரம் கோடி - கிடைத்தது ரூ.1146 கோடி: தமிழக அரசு அதிருப்தி
    X

    புயல் நிவாரணத்துக்கு கேட்டது ரூ.15 ஆயிரம் கோடி - கிடைத்தது ரூ.1146 கோடி: தமிழக அரசு அதிருப்தி

    கஜா புயல் நிவாரணத்துக்கு தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்ட இடத்தில் மத்திய அரசு ரூ.1146 கோடி வழங்கியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. #GajaStorm #TNGovernment
    சென்னை:

    தமிழகத்தை கஜா புயல் தாக்கியதில் கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    புயல் மழைக்கு 63 பேர் பலியானார்கள். லட்சக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தென்னை, பலா, வாழை உள்ளிட்ட லட்சக்கணக்கான மரங்களும் சாய்ந்து விழுந்தன.

    ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சார வினியோகம் அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர்.

    புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு முதற்கட்டமாக ரூ.1000 கோடியை ஒதுக்கி மீட்பு பணிகளை செய்து வந்தது.



    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 22-ந்தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து புயல் சேத விவரங்களை தெரிவித்தார். அப்போது தற்காலிக நிவாரண பணிக்கு ரூ.1,431 கோடியும், நிரந்தர சீரமைப்புக்கு ரூ.14 ஆயிரத்து 910 கோடியும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

    இதைத்தொடர்ந்து அன்று மாலையே மத்திய குழு சென்னை வந்து, புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களுக்கு சென்று பார்வையிட்டது.

    இதைத்தொடர்ந்து மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.200 கோடியும், 2-ம் கட்டமாக ரூ.353 கோடியும் வழங்கியது.

    மத்திய குழுவினர் தாக்கல் செய்யும் இறுதி அறிக்கையின் அடிப்படையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி தேசிய பேரிடர் நிதியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக ரூ.1,146 கோடியே 12 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

    இது தமிழக அரசு கேட்டுக்கொண்ட நிதியில் வெறும் 7.64 சதவீதம் என்பதால் மத்திய அரசு மீது தமிழக அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

    ஏனென்றால் இந்த தொகையை வைத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க முடியாது என்று தமிழக அரசு கருதுகிறது.

    ஏற்கனவே சாய்ந்து கிடந்த மின்கம்பங்களை சீரமைக்கவே ரூ. 800 கோடிக்கு அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது.

    இடிந்து தரைமட்டமான வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். அதற்கான போதிய நிதி இல்லை. சாய்ந்து விழுந்த 8 லட்சத்துக்கும் அதிகமான தென்னை மரங்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். அதற்கும் நிதி இல்லை.

    வாழை, பலா, முந்திரி நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நிதி கிடையாது. மத்திய அரசு தரும் நிதியை வைத்து ஓரளவு சமாளிக்கலாம் என அரசு எதிர்பார்த்திருந்தது. ஆனால் ரூ.15 ஆயிரம் கோடிக்கு பதில் ரூ.1146 கோடியை ஒதுக்கியது தமிழகத்துக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    புயல் சேதத்தை பார்வையிட்ட மத்திய குழுவினர் சேத மதிப்பு அதிகமாக உள்ளது என்று தெரிவித்திருந்த நிலையிலும் மத்திய அரசு வெறும் ரூ.1,146 கோடியைதான் ஒதுக்கி உள்ளது. இது தமிழக அரசுக்கு பெரும் நிதிச்சுமையை உருவாக்கி விட்டது. இதில் இருந்து அரசு எப்படி மீளப் போகிறது என்று தெரியவில்லை என்று அந்த அதிகாரி ஆதங்கத்துடன் தெரிவித்தார். #GajaStorm #TNGovernment

    Next Story
    ×